விரைவான அரசியல்தீர்வு இன்றேல் தமிழ்ப்பேசும் மக்கள் அல்ல சிங்களம்பேசும் மக்களே வடக்கில் இருப்பர் – CV

vikneswaran5“இருபது வருட இராணுவ ஆட்சி மேலிடம் சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக எமது அலுவலர்களை ஆக்கியுள்ளது”

வருடாந்த நிதி சம்பந்தமான அறிக்கை – மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடல் நியதிச் சட்டத்தை வடமாகாண சபைக்குக் கையளிக்கும் போது

கௌரவ முதலமைச்சரால் ஆற்றப்படும் சொற்பொழிவு

கௌரவ சபைத் தலைவரவர்களே, கௌரவ அமைச்சர்களே, மாகாணசபை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களே!

இவ்வருடத்தைய நிதி சம்பந்தமான அறிக்கையையும், மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடல் நியதிச் சட்டத்தையும் வடமாகாண சபைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. பிரதிகள் உங்களுக்குத் தரப்பட்டுள்ளன என்று நம்புகின்றேன்.

அறிக்கைகள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. இந்த அறிக்கையானது பிரதம செயலாளரால் ஆளுனருடன் கலந்தாலோசித்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கை. நாம் சுட்டிக் காட்டிய சில விடயங்கள் அவற்றில் திருத்தஞ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நிதி ஆணைக்குழு எமக்குத் தருவனவற்றை வைத்தே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை வெளியிட முன்னர் எமது மாகாண சபை பற்றி ஒரு சில கருத்துக்களை உங்கள் முன்னிலையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் முன் வைக்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கான அனுமதியை கௌரவ சபைத் தலைவரிடம் வேண்டி நிற்கின்றேன்.

கௌரவ சபைத்தலைவரவர்களே, என் மதிப்பிற்குரிய சகோதர மாகாண சபை உறுப்பினர்களே!

சிறுபான்மையினரின் போராட்டங்களின் காரணமாகவே மாகாண சபைகள் நிறுவப்பட்டன என்பது எங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். முக்கியமாக வட கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் நலன் கருதியே மாகாண சபைத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பேசி, அதன் காரணமாக அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

ஆனால் மாகாணசபைச் சட்டத்தை அன்றைய அரசாங்கம் நாடு பூராகவும் ஏற்புடையதாக்கி வட கிழக்கு மாகாணங்களுக்கு அளிக்க வேண்டிய அதிகாரப் பரவல் என்ற கொள்கை ரீதியான மாற்றத்தைக் கொச்சைப் படுத்திவிட்டது. வடகிழக்கு மாகாணங்களுக்கு விசேடமாக எதுவுமே கொடுக்கப்படவில்லை. அவர்களுக்குத் தேவையான அதிகாரப் பரவலாக்கமும் விசேடமாகக் கவனத்திற்கு எடுக்கப்படவுமில்லை. அம்மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள், திருத்தங்கள், நலன்கள் போன்ற எவையுமே கருத்தில் கொள்ளப்படவில்லை.

மாகாணசபை முறைமையானது அதிகாரப் பகிர்விற்கான ஒரு திட்டம் என்று யாவராலும் அடையாளப்படுத்தப்பட்டு வந்த போதிலும் அது உண்மையில் நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியின் அதிகாரத்தை மென்மேலும் பலப்படுத்துவதாகவும் விரிவடையச் செய்வதாகவுமே அமைந்துள்ளது. ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி. ஆளுநரின் அனுமதி இன்றி எந்த ஒரு நியமனமும் நடைபெற முடியாது. செயலாளர்கள் தொடக்கம் கீழ் மட்டம் வரையில் அவரின் ஊடாகவே நியமனங்கள் நடைபெறுகின்றன. பிரதம செயலாளர் ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுசரணையுடன் நியமிக்கப்பட வேண்டும் என்றிருப்பினும் எமது தேர்தல் தெரிவின் அடிப்படையில் அவரும் நியமிக்கப்படவில்லை. மற்றைய செயலாளர்களும் நியமிக்கப்படவில்லை.

அதைவிட ஆளுநரின் ஆட்சி ஆக்கிரமித்த ஒரு இராணுவத்தின் அதிகார வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு மாகாணசபை அலுவலரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை உறுப்பினருடன் சேர்ந்து கூட்டுறவாக இயங்கத் தயங்குகின்றார்கள். எங்கே முன்னைய போர்க்கால இராணுவ மேலதிகாரியும் இன்றைய ஆளுநருமாகிய ஒருவரின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு!

அதை விட எமது நியதிச் சட்டங்களை உரியவாறு உருவாக்கி மன்றுக்குச் சமர்ப்பிக்கக் கூடிய நிர்வாக அலுவலர்கள் எம் மத்தியில் இல்லையோ என்று ஏங்கவேண்டியுள்ளது. காலத்தின் கட்டாயத்தால் கதிரை மாறி கடுகதியில் சிரேஷ்டநிலை அடைந்துள்ள அலுவலர்கள் பலரிடம் இருந்து அப்பழுக்கற்ற அதிகாரத் திறமையை எதிர்பார்க்க முடியாதுள்ளது. உரியவர்களை, திறமை மிக்கவர்களை வெளியில் இருந்து கொண்டு வர உரிய ஏற்பாடுகள் நிலைநிறுத்தப்படவில்லை.

இருபது வருட இராணுவ ஆட்சி மேலிடம் சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக எமது அலுவலர்களை ஆக்கியுள்ளது என்பது கண் கூடாகத் தெரிகிறது. அதற்காக அவர்களை நான் கடிந்து கொள்ளவில்லை. கவலைப்படுகின்றேன். ஆட்சித்திறனில், அபிவிருத்திப் பணி நிர்வாகத்தில் உள்ளேயும் புறத்தேயும் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

இந்தத் தருணத்தில் யாராவது ஒருவர் கேட்கக் கூடும் மாகாண சபைகளுக்கு உரித்துக்கள் போதாமல் இருந்தும் ஏன் நீங்கள் தேர்தலில் நின்றீர்கள் என்று. இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று தேர்தலில் நின்றால்த்தான் மக்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகள் போன்றவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் எம் மக்களின் உளப்பாங்கினை உலகறிய உரக்கக் கூறியுள்ளது அந்தத் தேர்தல்; முடிவுகள். இரண்டாவது – எங்களுக்கு பதவி இல்லாமல், மக்களின் செல்வாக்கு இல்லாமல் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் போதுமானதல்ல என்று எவ்வளவு தான் கருத்தரங்குகளில் நாங்கள் கூறினாலும் அது எடுபடாது. மக்கள் செல்வாக்குடன் அந்தப் பதவியில் இருந்து இடையூறுகளை அனுபவித்த பின் நாம் கூறினோமானால் அதை உலகம் கேட்கும். அதைத் தான் நாங்கள் இப்பொழுது செய்து வருகின்றோம். வெறுமனே பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் போதுமானதல்ல என்று கூறுவதிலும் பார்க்க நாளாந்தம் எவ்வாறு அந்தப் போதுமற்ற நிலை எமது நிர்வாகத்தில் குறுக்கிடுகின்றது என்பதை உலகறியச் செய்வது சாலச் சிறந்த வெளிப்பாடு என்று நாம் கருதுகின்றோம்.

2012ம் ஆண்டின் ஐக்கியநாடுகள் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் வட கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் அதற்கேற்ற விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்பது சந்தேகம் அளிக்கின்றது. வடமாகாண சபைத் தேர்தல் இந்தியாவின் நெருக்குதல்களாலேயே நடைபெற்றது. இராணுவத்தை வடமாகாணத்தில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வைத்து வடமாகாண மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

2009ம் ஆண்டு மே மாதத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அண்மையில் வந்த வெளிநாட்டுத் தலைவர்கள் அனைவரும் வட கிழக்கு மாகாணங்களுக்குப் போதிய அதிகாரப் பரவலாக்கல் அவசியம் என்ற விதத்தில் கருத்துக்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இப்பேர்ப்பட்ட அதிகாரப் பரவலாக்கலுக்குத் தற்போது இருக்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் போதியதாக இருக்க மாட்டாது என்பது வெள்ளிடைமலை. வேண்டுமெனில் மாகாண சபையை இடைக்கால மாற்று நிர்வாகமாக அமைத்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகலாம். அரசியல் ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகள் நாடு சுதந்திரம் அடைந்து 65 வருடங்கள் ஆகியும் தீர்க்கப்படவில்லை. மேலும் மேலும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது கூடிய அல்லல்களையும், அவலங்களையுந் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் சுமத்தி வருகின்றன.

அடுத்த கட்டமாக நாங்கள் சர்வதேச சமூகத்தையே நம்ப வேண்டியிருக்கிறது.

சர்வதேசம் கடந்த இரண்டு மூன்று மாதங்களுள் பல நன்மைகளை எமக்களிப்பதாக உறுதி மொழி அளித்துள்ளார்கள். அந்த நன்மையைப் பெற நாங்கள் உரியனவற்றைச் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவதாக 2012ல் குறிப்பிட்டிருந்தது.

அவற்றைப் பெற ஆவன செய்ய வேண்டும். வெளிநாடுகளின் நெருக்குதல்கள் இல்லாவிடில் அரசாங்கம் எந்த விதமான அதிகாரப் பகிர்வையும் வழங்கமாட்டாது. எம் மறுமலர்ச்சிக்காக வெளியார் தரும் உதவிகள் எம்மை வந்தடைய அரசாங்கம் முட்டுக் கட்டையாக இருக்காது சர்வதேசம் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியார் தரும் உதவிகளை நேரடியாகப் பெற சர்வதேசம் உரியனவற்றைச் செய்து தர வேண்டும். சில நேரங்களில் வெளிநாட்டு நிதியுதவி கொழும்பில் முடக்கப்பட்டு விட மாகாணத்தில் நடக்கும் செயற் திட்டங்களுக்கு உரிய நேரத்தில் பணம் வராது போய்விடுகின்றது.

இவை மட்டுமல்லாமல் எமது அலுவலர்களிடையே போதிய தொழில் திறனை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு தேவையான நியதிச் சட்டங்களைத்; தயாரிக்கப் போதுமான தகைமையுள்ள அலுவலர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். அத்துடன் செயற்திட்டங்களைத் தயாரிக்கக் கூடிய தகைமைகளைக் கொண்டவர்களையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய நிலையில் நான் காண்பது ஜனநாயகத்தில் இருந்து நாடு தூரச் சென்று கொண்டிருப்பதையே. நாங்கள் சமஷ்டி, சுயாட்சி, அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் பேச்சில் தடங்கியுள்ளோம். ஆனால் வடமாகாணத்தில் நடப்பது யாவும் சர்வாதிகாரத்திற்கே வித்திடுவதாகத் தெரிகிறது. குடும்ப ஆட்சியை ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா என்று வாய்விட்டுக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. இராணுவத்தை எந்தக் காலத்திலும் வாபஸ் பெற மாட்டோம் என்று போர் முடிந்து சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் கூறுபவர்கள் என்;ன மனோநிலையில் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மிக விரைவாக அரசியல் தீர்வுகள் காணப்படாவிட்டால் தமிழ்ப் பேசும் மக்களுக்குப் பதில் சிங்களம் பேசும் மக்களே வடமாகாணத்தில் அதிகரித்து விடுவார்கள். அதனால் என்ன என்று கேட்குந் தமிழர்களை நான் சந்தித்துள்ளேன். தென்னாட்டில் பரவலாக என் இளமைப் பருவத்தில் குடி கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களை 1958லும் 1983லும் அதற்கு இடைப்பட்ட காலத்திலும் அடித்து விரட்டிய பின்னர் தான் வடக்கில் இராணுவ உதவிகளுடன் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இனப்படுகொலைக்கு ஒப்பானது என்பது மேற்படி தமிழ்ப்பேசும் மக்களுக்குத் தெரியாதா? அல்லது தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சுயநல காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு கூறி நிற்கின்றார்களா?

வடக்குக் கிழக்கு மக்களைத் தமிழ்ப் பேசும் மக்கள் என்று அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு எடுத்துச் செல்ல ஊடுறுவல்கள் நடைபெற்று வருகின்றன.

விரைவாக வடகிழக்கில் இப்போதிருக்குந் தமிழ்ப் பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேசப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். மேலும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அசட்டையாக இருந்து வந்தால் தமிழ்ப் பேசும் மக்களின் நிலைமை மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமாகிவிடும் என்பதை எம் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இத்தால் கூறி வைக்கின்றேன். எமக்குக் கிடைக்கப் போகும் நிதியுதவி மிகச் சொற்பமே. எனினும் விதவைகள் குடும்பங்கள், தனிப் பெண்களைக் குடும்பத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்கள், அங்கவீனர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை நல்வாழ்வு பெற பிற நாட்டு உதவிகளுடன் கரை சேர்க்க எண்ணியுள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத் தேவைகளைத் தெரிந்த அந்தந்த மாவட்ட மக்களின் நல்வாழ்வுக்காக நடவடிக்கைகள் எடுக்க உத்தேசித்துள்ளோம். பாரிய வேலைத் திட்டங்களையும் வெளியார் உதவியுடன் செய்து முடிக்க எண்ணியுள்ளோம்.

இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காது என்று நம்புகின்றோம். எம் மக்களின் நல்வாழ்வும், மனச் சந்தோசமும் முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதை சிங்கள மக்கள் உணர்வார்கள் என்று நம்புகின்றேன்.

Tags: , ,

Leave a Reply