திருமலைத் தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டனம்

kajendranமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டிப்பதாக அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது;

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10) திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களது உறவுகள் மீது பொலீசார் முன்னிலையில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடியறியும் குழுவினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் காணாமல் போனவர்களது உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்களுமாக பெருமளவானோர் அதில் கலந்துகொண்டிருந்தனர். போராட்டம் திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் 11.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சிவிலுடையில் சென்ற சிலர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகள் சிங்களத்திலும், அரைகுறைத் தமிழிலும் தூசணவார்தைகளால் ஏசியவாறே தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன், மூதூர் பிரதேசசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருச்செல்வம் மற்றும் பெண்கள், முதியவர்களென பெருமளவானவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மகேந்திரன் உட்பட இருவர் மட்டுமே சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்களும், ஏனைவர்களும் அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்குச் செல்லாது வீடுகளுக்கச் சென்றுள்ளனர். முகங்களை மறைத்துக் கட்டியவாறு உளவுத் துறையினருடன் இணைந்து சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் சிலருமாக சுமார் 50 பேர் கொண்ட குழுவினரே மேற்படி தாக்குதலை நடாத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற போது பொதுமக்களைப் பாதுகாக்கவோ, தாக்குதலாளிகளை தடுக்கவோ, கைதுசெய்யவோ பொலீசார் முற்படாது கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.

தாக்குதலின் பின்னர் பொலிஸ் நிலைத்திற்குச் சென்று முறைப்பாடு செய்வதற்கு மகேந்திரன் முயன்ற போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நடவடிக்கை தன்னை அச்சுறுத்தும் வகையிலும் முறைப்பாடு செய்யாமல் திரும்பிச் செல்லவைக்கும் நோக்கிலும் அமைந்திருந்ததாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார். பொலீசாருடைய நடவடிக்கைகளை நோக்கும்போது மேற்படி பொது மக்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசாங்கம் இருந்துள்ளது என்பதனையே வெளிப்படுத்துகின்றது.

யுத்தம் முடிந்து 4வருடங்கள் கடந்த பின்னரும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கூட தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க முடியாதளவுக்கு மோசமான அடக்குமுறையே காணப்படுகின்றது. இத்தாக்குதல் சம்பவத்தினையும், அதனை வேடிக்கை பார்த்த பொலீசாரது நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொதுநலவாய மாநாடு முடிவடைந்து ஒரு மாத காலம் நிறைவடைவதற்குள் நடைபெற்ற இச்சம்பவமானது சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதனையும், பொதுநலவாய மாநாட்டை நடாத்துவதற்காக வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றப்போவதில்லை என்பதனையுமே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

Tags: ,

Leave a Reply