எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று சொல்வது உண்மையோ..பொய்யோ…ஆனால் சேரன் எளிதில் மட்டுமல்ல, எக்கச்சக்கமாக உணர்ச்சி வசப்படுபவர்.
இதை பல்வேறு சந்தர்ப்பங்களில், பலமுறை நிரூபித்திருக்கும் சேரன், நேற்று நடைபெற்ற நிமிர்ந்து நில் என்ற படத்தின் இசைவெளியீட்டுவிழாவிலும் அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்பட்டு அரங்கில் இருந்தவர்களையே அதிர்ச்சியடைய வைத்துவிட்டார்.
”தமிழ்சினிமா இன்றைக்கு ஆரோக்கியமாக இல்லை. படம் வெளிவருவதற்கு முன்பே திருட்டு விசிடியில், இணையதளங்களில், கேபிள் டி.வியில் வெளியாகிறது. அதையும் தாண்டி மக்கள் திரையரங்குக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்க சினிமாக்காரர்களுக்கு முதுகெலும்பில்லை.
கேரளாவிலோ, மும்பையிலோ திருட்டு விசிடி இல்லை. இங்கு மட்டும் இருக்கிறது. காரணம் இங்கே உள்குத்து இருக்கிறது. உள் குழப்பங்கள் இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, சினிமா அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறது. அவர்கள் முன் சினிமா கைகட்டி நிற்கிறது.
நிமிர்ந்து நில் என்று படம் எடுத்தால் போதாது. அவர்கள் முன் நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
நமது சொத்தை யாராவது கொள்ளையடித்துச் செல்வதை விட, நாமே அதை முறைப்படுத்தலாமே. படம் ரிலீசாகும்போதே விசிடி ரைட்ஸ் கொடுத்து விடலாம். திருட்டு விசிடிகாரர்களுக்கு போகிற பணம் தயாரிப்பாளர்களுக்கு வரும்.
எனது ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை படம், ரிலீசாகும்போதே விசிடி, கேபிள், இண்டர்நெட்டில் வெளியிடும்வகையில் உரிமைகளை கொடுத்துவிடப்போகிறேன்.”
சேரன் இப்படி ஆவேசமாக முழங்கியதைக் கேட்டதும் அனைவருக்கும் ஷாக். என்னாச்சு சேரனுக்கு என்பதுபோல் அவரைப் பார்த்தனர்.
அதானே..சேரனுக்கு என்னாச்சு?
அவர் இயக்கி தயாரித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படம் முடிவடைந்து பல மாதங்களாகிறது.
படத்தை வாங்க ஆளில்லை. பல விநியோகஸ்தர்களுக்கு ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைப் போட்டுக்காட்டியும் ஒருத்தரும் வாங்க முன்வரவில்லை.
சரி..நாமே நேரடியாக ரிலீஸ் செய்யலாம் என்று முயற்சி செய்திருக்கிறார் சேரன்.
எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
















