சீனாவும், இந்தியாவும் இலங்கையின் சந்தையை ஆக்கிரமிப்பதால் எமது நாட்டு கைத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.
இந்தப் பாதிப்பிலிருந்து கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனாவின் குப்பைகளுடன்தான் எமது கைத் தொழிலாளர்கள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு, பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கைத்தொழிலாளர்கள் நாட்டுக்குச் சுமையானவர்கள் அல்லர். அவர்கள் நாட்டின் சுமையைச் சுமப்பவர்கள்.
ஆனால், வரவு – செலவுத் திட்டத்தில் அவர்களை அரசு கருத்திற் கொள்ளவே இல்லை. நமது நாட்டு மக்கள்தான் அதிகளவு மின் கட்டணத்தைச் செலுத்துகின்றனர். இதனால் கைத்தொழிலாளர்கள் பாதிப்புக்கு முகங்கொடுக்கின்றனர்.
எனவே, கைத்தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் கல்விக்கொள்கையை வகுக்கும்போது கைத்தொழில்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். வெளிநாட்டுக் கொள்கைகளும் கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும்.
எமது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அமெரிக்காவைத் தான் இங்கு விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் எமது கைத் தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றனர்.
சீனாவை எடுத்துக் கொண்டால், தமது சிறந்த உற்பத்திகளை அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்புகிறது.
ஆனால், தரம் குறைந்த பொருள்களைத்தான் எமது நாட்டுக்கு அனுப்புகிறது. சீனாவிலிருந்து வரும் குப்பைகளுடன்தான் எமது கைத்தொழிலாளர்கள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – என்றார்.
கைத்தொழிலாளர்கள் நாட்டுக்குச் சுமையானவர்கள் அல்லர். அவர்கள் நாட்டின் சுமையைச் சுமப்பவர்கள்.
















