சர்வதேச அளவில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் மிகச்சிறந்த பிரமுகர்கள், வல்லுனர்கள், தலைவர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ‘பாரின் பாலிசி’ அமெரிக்க இதழ் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலை தன் வாசகர்களிடம் ஆன்லைன் ஓட்டுப்பதிவு மூலம் ‘பாரின் பாலிசி’ தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது, அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் உயர் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன். உலக தலைவர்களை, உலக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத்துறை எந்த அளவுக்கு உளவு பார்க்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியவர்; அமெரிக்காவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஸ்னோடன் வெளியிட்ட ரகசியங்களால் கடந்த சில மாதங்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பட்டியலில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு இந்திய பிரபலம் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் தான் சமீபத்தில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி கூடுதல் இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். 32வது இடம் இவருக்கு. ஊழலுக்கு எதிராக மக்களை திரட்ட முயற்சித்தவர்; அரசின் நிர்வாக திறமையற்ற நிலையை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி, அவர்களை ஈர்த்தவர். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சமீபத்தில் தேர்தலில் பிரபலமான தலைவராக விளங்கியவர். மக்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் என்று இந்த இதழ் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் வெளியான மற்ற பிரபலங்கள் பற்றிய விவரம்:
* இந்தியாவில் சமூக சேவை செய்து பிரபலமானவர்கள் ஊர்வசி புடாலியா, கவிதா கிருஷ்ணன். இவர்கள் இருவரும் 77 வது இடத்தில் உள்ளனர். ‘இந்தியாவில் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, திடமான போராட்டங்களில் இறங்கி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் என்று இவர்கள் பற்றி அமெரிக்க இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
* சுகாதார உரிமை தொடர்பான ஐநா அமைப்பின் பிரதிநிதி ஆனந்த் குரோவர், ‘கிவ் டைரக்ட்லி’ என்ற தன்னார்வ தொண்டு ஆன்லைன் அமைப்பை நடத்தும் ரோகித் வான்சூ, தொற்று நோய் தடுப்பு நிபுணர் சஞ்சய் பாசு, பங்குச்சந்தை தொடர்பான ஆன்லைன் நிதி மையத்தை நடத்தும் நாவல் ரவிகாந்த் ஆகிய அமெரிக்க இந்திய பிரமுகர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
* அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி, ஈரான் பிரதமர் ஹசன் ரஹானி, போப் பிரான்சிஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்கள்.
* இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், ராணுவ அத்துமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
* சர்வதேச பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ராஜேந்திர பச்சோரியும் இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
* கல்வியில் புரட்சி ஏற்படுத்தி, தலிபான் தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா பட்டியலில் 71 வது இடம் பெற்றுள்ளார்.
















