முதல் படத்திலேயே விஜய்யால 90 லட்சம் ரூபாய் நஷ்டம் வந்துடுச்சி, அதனாலா உங்க மகனை ஹீரோவாப் போட்டு படம் எடுக்கிறப்போ உஷாரா இருங்க… என்று விஜயகாந்த்தை எச்சரிக்கும் விதமாகப் பேசினார் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
விஜயகாந்த்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துவக்க விழா என்பதால் வந்திருந்த நான்கைந்து சினிமா பிரபலங்களில் முக்கியமானவராக இருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
விஜய்காந்த்தை வைத்து 17 படங்களை டைரக்டர் செய்தவர் என்பதால் அவரைத் தான் முதலில் பேச அழைத்தார் மச்சான் சுதீஸ்.
வந்த வேகத்தில் மைக்கைப் பிடித்த எஸ்.ஏ.சியோ நைட்டு போட்ட சரக்கோட தலைவலி இன்னும் தீரலேங்கிற ரேஞ்சுல சண்முகப்பாண்டியன் என்ற பெயரை சரவணப் பாண்டியன் என்று தப்பு தப்பாகச் சொல்லி உளறிக் கொட்டினார்.
நீங்க எல்லாரும் அவரை கேப்டன்னு கூப்பிடுவீங்க.., ஆனா நான் எப்பவுமே அவரை விஜய்ன்னு தான் கூப்பிடுவேன். என் மகன் விஜய்யை நான் இளையதளபதின்னு கூப்பிட மாட்டேன். அதேபோல என் உடன் பிறவாத தம்பி விஜயகாந்த்தையும் நான் விஜய்ன்னு தான் கூப்பிடுவேன்.
ஏன்னா நம்மோட உடன்பிறப்புகளை தம்பின்னு கூப்பிடுறப்போ ஒரு நெருக்க வந்திடுது என்றார். அவரை எப்பவுமே நான் அன்போட அப்படித்தான் கூப்பிடுவேன்.
என்றவர் தன் மகன் விஜய்யை வைத்து படமெடுத்து நொந்த கதையை சொன்னார்.
நான் என்னோட பையன் விஜய்யை ஹீரோவாப் போட்டு ‘நாளையதீர்ப்பு’ ன்னு முதல் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தை எடுத்ததுல எனக்கு 90 லட்சம் ரூபாய் நஷ்டம் வந்துடுச்சு. படம் சுத்தமா ஓடல. 90-கள்ல 90 லட்சம் ரூபாய்ன்னா அது பெரிய தொகை. அதுவரை நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் பூராவும் அந்தப் படத்துல போயிடுச்சு.
என்ன பண்றதுன்னு தெரியாம வீட்ல உட்கார்ந்துக்கிட்டிருந்தேன். விஜய்க்கு நடிகனாகனும்னு ஆசை இருந்ததால.., அவனை எப்படியாவது வெற்றி ஹீரோவா மாத்தணும்னு நெனைச்சப்போ, ஒரு பெரிய ஹீரோவோட சேர்ந்து விஜய்யை நடிக்க வெச்சா நல்லாருக்கும்னு முடிவு பண்ணினேன்.
அதுக்கு யாரை போடலாம்னு முடிவு பண்ணி விஜயகாந்த்கிட்ட விஷயத்தை சொன்னப்போ “உங்க மகனை அறிமுகப்படுத்துறீங்க, அதனால இந்தப் படத்துல நடிக்க எனக்கு காசே வேணாம்”னு சொல்லி செந்தூரப்பாண்டிங்கிற படத்துல நடிச்சுக் கொடுத்தார். இப்படி ஒரு மனிதநேயம் விஜயகாந்த் கிட்ட இருக்கு., ஆனா என் பையன்கிட்ட இல்ல என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனார் எஸ்.ஏ.சி.
















