வட மாகாணசபையின் ஆளுநர் திட்டமிட்ட அடிப்படையில் அரசமைப்பை மீறிச் செயற்படுகின்றார் என அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆதாரங்காட்டி நேற்று சபையில் பேசினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.
சட்ட நுணுக்கங்கள் தெரியாத -அரசமைப்பை மீறிச் செயற்படும் ஆளுநரை நீக்குவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை எடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதம செயலாளர் நியமனம், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம் போன்றவற்றை மேற்கொள்ளும்போது முதலமைச்சரின் இணக்கம் அவசியம் என அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறை வடக்கில் பின்பற்றப்படவில்லை.
அப்படியானால் யார் அரசமைப்பை மீறிச் செயற்படுவது? மத்திய அரசும், ஆளுநரும் தான் அரசமைப்பை மீறுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
வடமாகாணசபை அரசமைப்பை மீறுகின்றது என வடக்கு ஆளுநர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வீடமைப்பு மற்றும் போக்குவரத்துத்துறைகளைத் தமது அதிகாரத்தின் கீழ் கோருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
அரசமைப்பின் பிரகாரம் போக்குவரத்து, வீடமைப்பு மாகாணப் பட்டியலில்தான் இருக்க வேண்டும். நிலைமை இப்படியிருக்கையில், இது விடயத்தில் வடக்கு மாகாணசபை அரசமைப்பை மீறியுள்ளது என எவ்வாறு கூறுவார்? ஆளுநர் கூறிய பொறுப்புவாய்ந்த கருத்துத்துத்தானா இது?
வடக்கு ஆளுநர் சட்டத்தில் புலமை பெற்றவர் அல்லர். அவர் எப்படி அரசமைப்பின் பொருட்கோடலைக் கோர முடியும்? வடமாகாணசபையானது அரசமைப்பின் பிரகாரம் தான் செயற்படுகின்றது. ஆளுநர் தான் அரசமைப்பை மீறும் வகையில் செயற்படுகின்றார்.
எனவே, அரசமைப்பை மீறும் அவரை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
குறிப்பாக, வடமாகாணசபைக்கு அண்மையில் பூஜித ஜயசுந்தர என்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவ்வாறான நியமனங்களின்போது மாகாண முதலமைச்சரின் இணக்கப்பாடு அவசியம்.
ஆனால், இது விடயத்தில் அவரின் ஒப்புதல் பெறப்பட்டதா? அப்படியானால் அரசமைப்பை மீறிச் செயற்படுவது வடமாகாணசபையா? ஆளுநரா? மத்திய அரசா?
பொலிஸ், சட்டமும் ஒழுங்கும் ஆகியன மாகாண விடயதானங்களுக்குரியவை.
ஆனால், சட்டமும் ஒழுங்குமே பகிரப்பட்டுள்ளது. பொலிஸ் வழங்கப்படவில்லை. பிரதம செயலாளர் நியமனத்துக்கும் முதல்வரின் இணக்கம் தேவை. இந்த நடைமுறையை அரச தரப்பு பின்பற்றவில்லை.
சட்டத்தை மதித்து, அரசமைப்பை வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஆளுநர் உடன் தெரிவுசெய்யப்பட வேண்டும். ஆளுநர் ஒருவர் அரசமைப்பை மீறுகின்றபோது அவரைப் பதவி நீக்கலாம் என அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது – என்றார்.
















