புத்தாண்டுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரியைப் பெற நிதிச் சட்டத்தில் நியதி இருக்குமானால் அதனைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதோடு, உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுடனான கலந்துரையாடலை மூன்று மாதத்துக்கு ஒரு தடவை நடத்தி முயற்சிகளை மேற்கொள்வேன் என மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை நகர சபையின் புதிய நவீன சந்தைக் கட்டடத் திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர் பருத்தித்துறை நகர சபைத் தலைவர் சட்டத்தரணி சபா.ரவீந்திரன் விடுத்த இரண்டு கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:
நான் எதிர்பார்க்காவிட்டாலும் என்னை நல்ல முறையில் வரவேற்று கெளரவித்துள்ளீர்கள். எனக்கு பெரும் வரவேற்பு வேண்டாம். கெளரவமும் வேண்டாம். மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வர வேற்பை ஏற்றுக்கொள்கின்றேன். இனிமேல் இப்படியான வரவேற்பு வேண்டாம்.
நாங்கள் பதவிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. இன்னமும் செயலாளர்களைச் சந்தித்துப் பேசவில்லை. அவர்களை விரைவில் கூப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
அடிப்படை வேலைகள் முடிந்ததும் இதனைச் செய்வேன். பெரும்பாலும் புதுவருடத்துடன் இது சரியாக அமையும். நாங்கள் ஏதாவது வேலைகளை செய்து முடித்தால் அதுவும் இரண்டு வருடங்கள் சென்று வேலைகள் நிறைவு பெற்றாலும் வரவேற்பு கெளரவங்களைச் செய்யலாம். ஒரு வேலையும் இன்னமும் செய்து முடியாத நிலையில் இவ்வாறான வரவேற்பை செய்வது நல்லதல்ல.
மக்கள் வங்கி புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு 100 லட்சம் ரூபா முத்திரை வரி வேண்டுகிறார்கள். அதற்குரிய நிதிச் சட்டம் அனுமதிக்காமையினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தப் பணம் அரசுக்குத் திரும்பிப் போகும்.
ஆனாலும் அதனை நிதியச் சட்டத்தின் மூலம் திரும்ப எடுக்க இடமுண்டு. காலக் கிரமத்தில் இதனைச் செய்வோம். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி குறை நிறைகளை தீர்க்கும் பணி புத்தாண்டுடன் சரிவரும் – என்றார்.
















