அரசுடன் இப்போதைக்கு பேச்சுக்கு சாத்தியமில்லை; கூட்டமைப்பு நேற்று வவுனியாவில் தீர்க்கமான முடிவு நாடாளுமன்ற, மாகாண உறுப்பினர்கள் ஏகோபித்த ஆதரவு

tnalogo2இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தாம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் நிராகரிப்பதாக இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘ஜனாதிபதியைச் சந்திப்பது குறித்தும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களே கூடி முடிவெடுப்பர்’ என்று நேற்றைய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது.

நேற்றைய சந்திப்பின் போது, “வரவு – செலவுத் திட்ட இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசுவது குறித்து சக உறுப்பினர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

இதன் போது ஒரு சில உறுப்பினர்கள் மாத்திரமே பேச்சுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் முன்பாக பேச்சுக்கு செல்லக் கூடாது என்றும், சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுக்குச் செல்லக் கூடாது என்றும் ஒரு தொகுதி உறுப் பினர்களும் தெரிவித்தனர்.

இறுதியில் இப்போதைக்கு பேச்சுக்கு செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை மீளவும் கூட்டி கலந்துரையாடல் நடத்தி அதில் பேச்சுக்குச் செல்வதென்று முடிவெடுக்கப்பட்டால் மாத்திரமே பேச்சுகளில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ள போதும், அதில் இணைந்துகொள்ளவதில்லை என்றும் தெரிவுக்குழுவை நிராகரிப்பதாகவும் இதன்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply