மத்திய பங்களாதேஷில் புதன்கிழமை இந்து ஆலயமொன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
நெட்ரகொனா மாவட்டத்திலுள்ள காளி கோயிலின் ஒரு பகுதியே இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உள்ளூர்வாசிகள் சுமார் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பங்களாதேஷிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புபட்டவர்கள் அனைவரையும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெய்க் ஹஸீனா உறுதியளித்ததற்கு ஒரு நாள் கழித்தே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி அங்கு இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பைத் தொடர்ந்து ரஜ்ஷஹி, டினஜ்பூர், தகுர்ககோன், லல்மோனிர்ஹட் மற்றும் ஜெஸோர் உள்ளடங்கலான பல மாவட்டங்களில் இந்துக்களது வீடுகள் மற்றும் வர்த்தகங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் அந்நாட்டு பொலிஸார் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்ற நாச வேலைகளுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் வட பொக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஜமாத் – ஈ – இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் 11 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
















