இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க கொழும்பு நம்பகமான உள்ளகப் பொறிமுறை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் உருவாக்கத் தவறினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளருடன் சேர்ந்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கொண்டுவரப் பிரிட்டன் பாடுபடும்.
இவ்வாறு நேற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அயலுறவு மற்றும் பொதுநலவாய உதவி அமைச்சர் மார்க் சைமன்ஸ்.
நடவடிக்கை ஆரம்பம்
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை, நம்பத் தகுந்த உள்ளக பொறிமுறையினூடான விசாரணைகளை ஆரம்பிக்கவில்லையாயின், ஐ.நா மனித உரிமைகள் சபையில் எங்களுக்கு இருக்கக் கூடிய நிலையை வைத்து ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் சேர்ந்து சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்றார் அவர்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டனும் கடுமையாகப்பாடுபடும்.
அத்துடன் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மார்க் குறிப்பிட்டுள்ளார். ‘தீர்மானத்தைக் கொண்டு வரும் பிரதான பங்காளியான அமெரிக்காவுடன் சேர்ந்து தேவைப்படும் பெரும்பான்மையைத் திரட்ட பிரிட்டன் கடுமையாக உழைக்கத் தொடங்கியுள்ளது’ என்றார்.
இந்த ஆதரவு திரட்டும் நடவடிக்கை பிரிட்டனின் அமைச்சரவை மட்டத்தினால் முன்னெடுக்கப்படும் என்பதையும் மார்க் சைமன்ஸ் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
மார்ச் மாத கூட்டத்திற்கு முன்பதாக இதற்கு வேண்டிய ஆதரவைத் திரட்ட நாங்கள் முனைப்புடன் செயலாற்றுவோம்’ என்று மார்க் சைமன்ஸ் தனதுரையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டன் கலந்து கொண்டமை தொடர்பில் எழுப்பப்படும் விமர்சனத்தை நிராகரித்த அவர், பிரிட்டன் கலந்து கொண்டமையை பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் நியாயப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.
















