இலங்கை அரசாங்கம் தமது சொந்த மக்களை தண்டிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணர்வோருக்கு எதிராகவே இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சாக்கி இது தொடர்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை காப்பாளர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் வணக்கத்துக்குரிய கத்தோலிக்க தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கவலை கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார.
இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்ட போதும் தொடர்ந்தும் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான கைதுகளுக்கு அச்சுறுத்தல்களும் இலங்கையில் நல்லிணகத்தை தூரப்படுத்துவதுடன் ஜனநாயக வரம்புகளை மீறிவிடும் என்று சாக்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச விழுமியங்களை கருத்திற்கொண்டு மனித உரிமைகளை காக்குமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்

















