விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு எவ்விதமான சாத்தியங்களும் கிடையாது. எனவே, படைத்தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
வடக்கில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைத் தேடியே படைத்தரப்பு சுற்றி வளைப்புகளை நடத்துகிறதென்றும் தெரிவித்தார்.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் நிலை என இராணுவ பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்து மற்றும் வடக்கில் படையினரின் சுற்றி வளைப்புகள் தொடர்பாக கேட்ட போதே சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் மீண்டும் புலிகளின் பயங்கரவாதம் தலைதூக்குவதாக படைத்தரப்பினர் தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
ஏனென்றால் அவ்வாறு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான எந்தவிதமான சாத்தியங்களும் கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. எனவே, அரசியல் ரீதியாக படைத்தரப்பினரின் கருத்தை ஏற்க முடியாது.
ஜெனீவாவில் எமக்கெதிரான நடவடிக்கைகள் முன் நகர்த்தப்படும் சூழ்நிலையில் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதால் சிக்கல்கள் தோன்றலாம்.
சுற்றி வளைப்புக்கள்
வடக்கில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடியே படையினரின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்படுகின்றன.
அதேவேளை, அங்கு மக்கள் குடும்பம் குடும்பமாக படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வடக்கில் படையினரின் நடவடிக்கைகளின்போது சாதாரண பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகாத விதத்தில் படையினர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.

















