வல்லை. வெளியிலுள்ள படை முகாம் விஸ்தரிக்கப்படுகிறது: மக்கள் அச்சம்

lk-army2வடமராட்சி வல்லை வெளியிலுள்ள இராணுவ முகாம் கடந்த சில தினங்களாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதான வீதியில் உள்ள இந்த இராணுவ முகாம் பெருமெடுப்பில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வமராட்சிப் பிரதேச மக்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வல்லை வெளியில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். இந்த முகாமினால் கடந்த காலத்தில் தாங்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாக வடமராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் படிப்படியாக இந்த இராணுவ முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டு ஒருசில காவலரண்களுடன் மட்டும் இயங்கியது. அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் இருந்த இராணுவக் காவலரண்கள் அகற்றப்பட்ட போது இந்த இடத்திலிருந்தும் சில காவலரண்கள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இந்த இடத்தில் நிலையான முகாம் அமைக்கும் செயற்பாட்டில் படையினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முகாம் அமைப்பதற்கான பொருட்கள் அனைத்தும் இங்கு கொண்டுவந்து குவிக்கப்படுவதாகவும் அடுத்த சில தினங்களில் இந்தச் செயற்பாடுகள் மேலும் தீவிரமடையலாம் என்றும் வடமராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் வடபகுதி தொடர்ந்து இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்தச் செயற்பாட்டை நிறுத்துமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிடமும் சர்வதேச பிரதிநிதிகளிடமும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற நிலையிலும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் முக்கியத்துவம் வாய்ந்த வல்லை வெளியில் இராணுவ முகாம் பலப்படுத்தப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply