அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தற்கொலை செய்துக் கொள்வதன் மூலம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கை தோல்வி கண்டுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுவதாக, அவுஸ்திரேலியாவின் பசுமை கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் செனட் சபை உறுப்பினர் சாரா ஹன்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட இலங்கை அகதி ஒருவர், மெல்போர்ன் வைத்தியசாலையில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.
லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயதுடைய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சாராஹ் ஹன்சன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் உயிர்கள் பாதுகாக்கப்படும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது அகதிக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள், தாம் மீண்டும் நாடுகடத்தப்படுவதை விட, அங்கேயே மரணித்துவிடலாம் என்ற நிலையில் இருப்பதாக த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப் படுவோம் என்ற அச்சத்திலேயே பெரும்பாலான இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் கடந்த மாதம் மற்றுமொரு இலங்கை அகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், தமக்கு தாமே தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















