சர்வதேச விசாரணைக்கான சூழலில் “சகோதரப்படுகொலைகள்” பற்றி பேசுவது சரியா?

tnalogo2சர்வதேச விசாரணைக்கான சூழலில் “சகோதரப்படுகொலைகள்” பற்றி பேசுவது சரியா?
(கிழக்கில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்து விட்டது!)

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் மூவர் தொடர்பில் அண்மைக்காலமாக எதிர்மறையான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று கிழக்கை பீடித்துள்ள இந்த வைரஸ், நாளை வடக்குக்கும் பாய்ந்து பரவிப்படர்ந்து கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரையும் பதம் பார்த்து தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாகிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை மரணப்படுக்கையில் வீழ்த்தி விடும் பேராபத்து இருப்பதால், இந்த உயிர்கொல்லி கிருமியை சாகடிக்கும் விழிப்பு நிலையில் தமிழ் மக்கள் இருப்பது தம் தேகத்துக்கும், தேசத்துக்கும் தேசியத்துக்கும் நலம் பயக்கும்.

உயிர்கொல்லி நோயை பரப்பும் விச(ம)க்கிருமிகள்!

மாகாணசபை தேர்தலில் குறித்த மூவரும் போட்டியிடும் போது முன் வைக்கப்படாத இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள், இப்போது முன்வைக்கப்படுவது, 2015ம் வருடம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் மூவரும், யாரோ எவருக்கோ பெரும் சவாலாக விளங்கப்போகின்றார்கள். அல்லது அவர்களுக்கு அவ்வளவு இலகுவில் வாய்த்து விடாத வெற்றியை இவர்கள் மூவரும் மிகச்சுலபமாக பெற்று விடும் தகுதி நிலையில் இருக்கிறார்கள் என்பதையே குறித்த எதிர்மறை செய்திகள் அப்பட்டமாக புலப்படுத்துகின்றன.

வன்மத்தை கொட்டி எழுதி, அந்த எழுத்துகளால் மக்களுக்கு வெறுப்பைக்கூட்டி மக்கள் ஆதரவைக்குலைத்து மூவரையும் நலினப்படுத்துவதனூடாக மட்டுமே தமது வெற்றி சாத்தியமாகும் என்று, இருட்டு மூலைகளுக்குள் சதிவலை பிண்ணும் இந்த விச(ம)க்கிருமிகள் வெளியிட்டு வரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மூவர்கள் தொடர்பிலான எதிர்மறை செய்திகளை படிக்கின்ற போது,

முதலாவதாக,

மதி மயங்கி கோபம் வெளிப்படாமல், மாறாக கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னரா இவர்கள் இந்த குற்றங்களை புரிந்தார்கள்? என்ற கேள்வியை வலு நிதானமாக எழுப்புவது தவிர்க்க முடியாததொன்றாகிறது.

இரண்டாவதாக,

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத போராட்ட ரீதியாக மிகவும் பலம் பெற்றிருந்த சமகாலத்திலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பை தோற்றுவித்த போது, இப்போது இவர்கள் கூறும் இந்தக்குற்றங்கள் தொடர்பில் எதுவுமே தெரியாத புத்திசுயாதீனத்துடனேயா? ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளை புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைக்குள் உள்வாங்கிக்கொண்டார்கள் என்றும் இயல்பாகவே கேள்வி எழுகின்றது.

மூன்றாவதாக,

அவ்வாறாயின், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும், அந்த அமைப்பின் மதி உரைஞரும் தத்துவஞானியுமாகிய அன்ரன் பாலசிங்கம் அவர்களும், மூத்த பத்திரிகையாளரும் அற்புதமான அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளருமாகிய தராக்கி அவர்களும், மண் பற்றிய புரிதலும், மக்கள் பற்றிய தூர நோக்கு சிந்தனைத்தெளிவும் இல்லாமல், அறிவீனமாக நடந்து கொண்டார்கள் என்று, புலிகள் அமைப்பால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஆயுத வழிமுறை மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளை விமர்சிப்பவர்கள் கூற முற்படுகின்றார்களா?

நான்காவதாக,

சிறீலங்கா அரசின் கட்டுநாயக்கா, அனுராதபுரம் வான்படைத்தளங்கள் மீதும், ஹெப்பிட்டிகொலாவ, ஹபறன படைத்தளங்கள் மீதும், முத்தலிப், பரமிகுலதுங்க, ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, ஜானக பெரேரா போன்ற டேஞ்சர்மேன்கள் மீதும், தமிழின விரோதிகள் லக்ஸ்மன் கதிர்காமர், புளொட் மோகன் போன்றவர்கள் மீதும் பூமியைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து யோசிக்கும் அளவுக்கு, ஆகாயத்தைப்பார்த்து வாயை “ஆ”வென்று பிளந்து வியக்கும் அளவுக்கு, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த வைச்சகுறி தப்பாத தாக்குதல்களை தொடுத்த, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் படையப்புலனாய்வு பிரிவால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்ட ஒரு குற்றத்தை, இப்போது தாம் ஏதோ கண்டு பிடித்து விட்டதான தோரணையில், குறித்த செய்திகளுக்கு பில்டப் வேறு கொடுக்கப்படுகின்றது.

ஆகையால் மேலே கூறப்பட்டுள்ள நான்கு விடையங்களையும் உய்த்துணர்ந்து அலசி ஆராய்ந்து சுயமதிப்பீட்டுக்குட்படுத்தி, ஒவ்வொரு தமிழனும் தமிழிச்சியும் தெளிவு பெற்று விட்டால் மாத்திரமே, உண்டு தமிழினத்தின் வாழ்வும் வரலாறும்!

விழித்திருப்போம்! விழிப்பாயிருப்போம்!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் இல்லாத எதிரும் புதிருமான அமைதி நிலவும் இன்றைய காலத்திலும், தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக மிகச்சிறந்த வலிமையான பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்தி விட்டே களம் விட்டு அகன்றிருக்கிறார்கள். “அவர்கள் இல்லாத காலத்திலும் இருக்கும்” தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனும் இந்த உயர் வலயத்தை உடைத்தெறியும் முனைப்பில், தமிழ் தேசியத்துக்கு எதிராக எதிர்ப்பு அரசியல் செய்பவர்களே குறித்த நயவஞ்சகமான ஊடகப்போரை தொடுத்திருக்கிறார்கள் என்றே முதலில் ஊகிக்க வேண்டியிருந்தது.

ஆனால், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சார்புடைய இணையத்தளங்களே இந்த எதிர்மறை செய்திகளுக்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து பதிவேற்றி அக மகிழ்வதை அவதானிக்கின்ற போது, கூட்டுச்சதி மூலம் கூட்டமைப்பை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் கைங்கரியம், இலாப நோக்கிலான பேரம் பேசல்களுடனோ, அன்றி சுயநலன்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலோ திரைமறைவில் நடந்து கொண்டிருப்பது உறுதியாகிறது.

சர்வதேச விசாரணை சூழலில் சகோதரப்படுகொலைகள் பற்றி
பேசுவது சரியா?

சிறீலங்கா அரசின் தமிழினப்படுகொலைகள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவி பிள்ளையின் நெறிப்படுத்தலில், மகிந்த ராஜபக்ஸ அரசு மீது விசாரணைகுழு பாயவுள்ள நிலையில்,

கூட்டமைப்புக்குள் உள்ள ஒரு கட்சி தன்னை முன்னிலைப்படுத்தும் அதீத கற்பனையில், புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஏனைய கட்சிகளான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளை விமர்சித்து, அவர்களை பலவீனப்படுத்த முயல்வது,

தமிழர் நலனுக்கு சார்பாக எழுந்துள்ள சர்வதேச தரத்திலமைந்த “இனப்படுகொலை” விசாரணை பொறிமுறையிலிருந்தும், காலச்சூழலிலிருந்தும் மகிந்த ராஜபக்ஸவை காப்பாற்றி “சகோதரப்படுகொலைகள்” எனும் உள்வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு தேடும் காலப்பிழைக்கு வழி திறந்து விடப்போகிறது.

இந்த தந்திரோபாயத்தை நன்கு திட்டமிட்டு, யாரோ தனியாகவோ, சிறு குழுவாகவோ கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே முன்னெடுக்கின்றார்களா? என்றே சந்தேகமும் கொள்ளத்தோணுகின்றது.

2009ம் வருடம் இறுதி யுத்தத்துக்குப்பின்னர் நடைபெற்று முடிந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது கடமைகளை செப்பனே செய்திருக்கிறார்கள். மக்கள் தங்களின் பிரதிநிதிகள் யார்? என்பதை மிகத்தௌ;ளத்தெளிவாகவே தேர்ந்தெடுத்தும் விட்டார்கள்.

ஆதலால், முன்பள்ளி சிறார்களுக்கு முன் தமிழ் தேசியம் பேசுவதும், மூடிய அறைகளுக்குள் மெழுகுதிரிகளை கொழுத்தி விட்டு ஜனத்திரளில் கொழுத்தியதாக ஊடகங்களுக்கு படம் காட்டுவதால் மட்டும் எவரும் புனிதர்களாகி விட முடியாது.

அறவழிப்போராட்டம் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த இலங்கை தமிழரசு கட்சியும், ஆயுத வழிமுறை போராட்டம் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் கட்சிகளும் முக்கிய இருதுருவங்களாக ஒன்றுபட்டு, நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போல மாபெரும் “தேசிய விடுதலை இயக்கம்”மாக பரிணமித்து, வலுவான மக்கள் போராட்டங்களை நடத்தி, இன்றுள்ள மிகப்பெரிய வலிகள், இழப்புகளுக்கு பின்னரும் கூட தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்காது விட்டால், அது ஈழதேசத்தில் நடைபெற்ற போர்களில் இலட்சியத்துக்காக மரணித்த போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்யும் மாபெரும் வரலாற்றுத்துரோகமாவே அமைந்து விடப்போகின்றது.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு! அறிவோம் அறிவோம் அடியுங்கள் உடுக்கு!!

உடுக்கை அடித்து உடுக்கை அடித்து உருவை ஏற்றுங்கள். உரிமைப்போரை உலகம் அறிய உருவை ஏற்றுங்கள். விடியும் நேரம் அடிமைப்பேயை வெளியில் துரத்துங்கள்! வீரர் வாழ்வு இறப்பதில்லை நெஞ்சில் நிறுத்துங்கள்!

எமது செய்தித்தளத்தின் சிறப்புச்செய்தியாளர்,
-தமிழ்மகள்-

Tags: , ,

Leave a Reply