பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக விபரித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அந்த முன்னேற்றத்தை பொரு
ட்படுத்தாமல் மனித உரிமைகளை ஆயுதமாகக் கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.
ஜி – 77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பொலிவியா ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரலெஸ் ஐமாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்க தான் தயாராக இருப்பதாக பொலிவியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமது பொலிவிய விஜயம் தென் அமெரிக்க அரசுகளுடன் இராஜதந்திர உறவுகளுக்கும் பொருளாதார வர்த்தக தொடர்புகளுக்கும் புதிய ஆரம்பமாக அமையுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி ராஜபக் ஷ புதிய நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது தமது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல், பொருளாதாரம், கைத் தொழில், இறக்குமதி, ஏற்றுமதி ஆகிய துறைகளைப்பற்றிய தகவல்களை கேட்டறிந்த பொலிவிய ஜனாதிபதி இலங்கையின் ஆடைக் கைத்தொழில் தொடர்பாக விசேட அக்கறை காட்டுவதாகக் குறிப்பிட்டார். பொலிவியாவின் ஆடைக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு உதவி செய்ய முடியுமா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதுடன் ஆடைக் கைத்தொழிலை ஆரம்பிப்பதற்காக இலங்கையில் இருந்து சிறப்பு அறிஞர்கள் குழுவொன்றை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். அந்தக்கோரிக்கைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
பொலிவியா இலங்கையிலிருந்து கறுவாவை இறக்குமதி செய்ய வாய்ப்புண்டா என்பதைப்பற்றி விசாரித்த பொலிவியா ஜனாதிபதி நீர், மின்சார உற்பத்தி ஆகிய துறைகளில் இலங்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தமது நாடு விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கு விஜயம் செய்யும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை பொலிவிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக விபரித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அந்த முன்னேற்றத்தை பொருட்படுத்தாமல் மனித உரிமைகளை ஆயுதமாகக் கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பொலிவிய ஜனாதிபதி இத்தகைய பிரச்சினை தனது நாட்டுக்கு கடந்த காலத்திலும் தற்பொழுதும் இருப்பதாக தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் பொலிவிய மாளிகை முன்றலில் கோலாகலமான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளி
விவகார அமைச்சின் செயலாளர் ஷேனுக்கா செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
















