ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைகள், சர்வதேச தராதரத்துக்கு ஏற்றதாக உள்ளனவா என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும்.
அத்துடன் விசாரணைக் குழுவிடம் தகவல் வழங்குப வர்கள், அச்சுறுத்தப்படுவ தையோ அல்லது பழி வாங்கப்படுவதையோ தடுப்பதற்கான உத்தரவாதங்களும் அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, விடயப்பரப்புக்களை விரவாக்கி, போர்க் குற்றம் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறையை நாட்டின் எதிர்க் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர் ருபேட் கொல்விலிடம் கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டுப் பொறிமுறைகள் நம்பகத்தன்மைமிக்க சுயாதீன சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்களைக் கொண்டிருக்க வேண்டும். சகல தரப்பாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு உள்நாட்டுப் பொறிமுறைகளை ஏற்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஊக்குவிக்கும் அதேவேளை, அவ்வாறான பொறிமுறைகள் நம்பகத்தன்மைமிக்க சுயாதீன சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்களைக் கொண்டிருக்கவேண்டும்.
விசாரணைக் குழுவிடம் தகவல்களை வழங்கும் எவரும் அச்சுறுத்தலையோ அல்லது பழி வாங்கப்படுதலையோ எதிர்கொள்வதைத் தடுப்பதற்கான உத்தரவாதங்களும், நடவடிக்கைகளும் அவசியம்.
ஜெனிவாத் தீர்மானத்துக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்கள் காணப்படுகின்றதா என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் கண்காணிக்கும் என்றார்.
















