நெதர்லாந்து நாட்டில் வரலாறு காணாத அளவில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன் தினம் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சுமார் 150 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர்ஆம்ஸ்டர்டாம் நகரின் தென்மேற்கில் உள்ள கோயஸ் மற்றும் மிடில்பர்க் ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள NH 58 என்ற தேசியநெடுஞ்சாலையில் இவந்த விபத்து நடந்துள்ளது. இதில் 4 பேர் பலியானதாக ஜீலேண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்தர் பூட் அவர்கள் கூறியுள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுடைய எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். காயமடைந்த பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை உயரக்குடும் என அஞ்சப்படுவதாகவும்அவர் கூறினார். கடும் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அம்மாகாண பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரான ஹேன்ஸ் ஹப்ரெக்ட்செ கூறினார்.
இவ்விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க சுமார் 50 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். படுகாயமடைந்தவர்கள் மட்டும் சிகிச்சைக்காக ரோட்டர்டாமில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு உள்ளூரிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
















