கைப்பேசி பயன்படுத்தும் 92 சதவீத சிறார்கள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்…!

செல்போன் பயன்படுத்தும் சிறார்களில் 92சதவீதத்தினர் ஆபாச வீடியோக்களை அதிகம் பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் விழிப்புடன் இருந்து தங்கள் குழந்தைகளை கண்கானிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு. ஜுலை 30ஆம் தேதி சர்வதேச மனித கடத்தலுக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்புரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அமைப்பு சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் குழந்தைகள் கடத்தல் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், உடல் உறுப்பு திருட்டிற்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறினர்.

செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 43சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மர்ட் போன் பயன்படுத்துவதாக யுனிசெப் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதில் 92 சதவீத சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் பதிவேற்றம் செய்யப்படும் சிறுவர் சிறுமியரின் நிர்வாணப்படங்கள் குறித்து ஆய்வு செய்த யுனிசெப் அது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி 5வயது முதல் 12வயது வரையிலான 48சதவீத குழந்தைகளின் நிர்வாண படங்களும், 13முதல் 15வயது வரையில் 23.8சதவீத சிறுவர், சிறுமியர் நிர்வாண படங்களும், 16வயது முதல் 18வயதுவரையில் உள்ள 28சதவீத சிறார்களின் நிர்வாண படங்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் முகநூல் போன்ற சமூகவலைத்தள கணக்குகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மார்பிங் மூலம் சில நிர்வாண படங்கள் வெளியிடப்படுவதால், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது, அதில் ஆபாச இணையதளங்களை பயன்படுத்த முடியாத வகையில் முடக்கிவைக்கலாம் என்றும், சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் அப்போது தான் சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்களில் சிறார்கள் சிக்கிக்கொள்ளாமல் தடுக்க முடியும் என்பதே யுனிசெப் அமைப்பின் அறிவுரையாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!