ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுக்க ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போலிப் பிரச்சாரங்கள் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மிக மோசமான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அரச மற்றும் அரச சார்பு ஊடகங்களும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றுக்கு அப்பால் ரணில் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யினருக்கெதிரான சித்திரவதைகள் தொடர்பில் “படலந்தை” என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.
ரணில் அக்காலப்பகுதியில் பியகம தொகுதி அமைப்பாளராக இருந்ததுடன், படலந்தை என்பது அந்த தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமமாகும். அங்கு இருந்த சித்திரவதை முகாம் ரணிலின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றதாக சித்தரிப்பது இந்த தொலைக்காட்சித் தொடரின் நோக்கமாகும்.
அதேபோன்று விடுதலப் புலிகளை ரணில் பிளவுபடுத்தியதாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக திரும்புவதை தடுப்பது அவரது நோக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய சிலுமின பத்திரிகை , விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தூண்டுகோலாக இருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி யார், என்ற தலைப்பில் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியுடன் ரணிலுடன் ஐரோப்பாவில் வாழும் நான்கு இலங்கையர்கள் ஒன்றாக நிற்கும் புகைப்படமொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கும் ,ரணிலின் ஐரோப்பிய விஜயத்துக்கும் இடையில் முடிச்சுப் போடும் அரசாங்கத்தின் சதி அம்பலத்துக்கு வந்துள்ளது. இதனை பாரியளவில் பிரச்சாரப்படுத்துவதன் ஊடாக சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகளின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக ரணிலுக்கு எதிராக திசை திருப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை தனது சட்டத்தரணிகளை தொடர்பு கொண்டுள்ள ரணில், சிலுமின பத்திரிகைக்கு எதிராக உடனடியாக மானநஷ்ட வழக்குத் தொடுக்குமாறு பணித்துள்ளார். போலியான செய்தி மூலம் அபகீர்த்தி ஏற்படுத்தியதற்கு ஈடாக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோர அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக லண்டனில் சிலுமின பத்திரிகையின் விநியோகத்தை தடைசெய்வது தொடர்பில் லண்டனில் தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்யவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் முடிவு செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போலியான செய்திகளை வெளியிடுவதற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே லண்டனில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ரணிலுடன் சந்திப்பை மேற்கொண்டதாக கூறி சிலுமின பிரசுரித்திருக்கும் புகைப்படத்தில் காணப்படுகின்றவர்கள் சிங்களவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்கள் நால்வரும் லண்டனில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை முக்கியஸ்தர்கள் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற போலிப் பிரச்சாரங்களை அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இவற்றுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சியும் தயார் நிலை எடுத்துள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் இலங்கை அரசியல் களம் கடும் பதற்றம் மற்றும் பரபரப்பாக மாறப் போகின்றது.
















