தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மீது சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட ரி-56 ரகத் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பில் 4 பேரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரி-56 ரகத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் வேலியோரமாக வீசப்பட்ட நிலையில் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் அதனை கண்டு பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் காணப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணை செய்ய 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் மனைவி ஒரு ஆசிரியராவார் கடந்த வாரம் வீட்டுக்கு வந்த இருவர் கடும் தொனியில் எனது கணவரின் பெயரைக் கூறி அழைத்து விட்டுச் சென்றனர். இது குறித்து கணவனிடம் கூறினேன் ஆனாலும் அவர் தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என சாதாரணமாக கூறி அதை விட்டு விட்டார் என்று கூறினார். குறித்த பகுதியில் தற்போது பெருமளவு பொலிஸாரும்,இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















