ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை நேர்த்தியற்றது; இலங்கை அதிருப்தி

periesஇலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசாரணை நடவடிக்கைகள் தொழில் நேர்த்திக்கு உட்பட்ட வகையில் நடக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் இலங்கை அரசாங்கம்,

அது குறித்த தமது அதிருப்தியை வெளியிடுவதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐ.நாவின் வதிவிட இணைப்பாளரான சபினே நண்டியை சந்தித்தார் என அறிவித்துள்ளது.

இந்த புலன் விசாரணைக்கான மனுக்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி என்று முன்னர் தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும், அதிகாரபூர்வமற்ற வகையிலும் அது மாற்றப்பட்டது; மீண்டும் திருத்தப்பட்டது ஆகியன குறித்து அமைச்சர் ஐநா இணைப்பாளரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் என இலங்கை அரசாங்க அறிக்கை ஒன்று கூறுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணையத்தில் இறுதித் திகதி ஒக்ரோபர் 30 என்றும் அது நிச்சயமானது, மாற்றப்பட முடியாதது என்று கூறப்பட்டிருந்ததாக கூறியுள்ள இலங்கை அறிக்கை, ஆனால், உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கான செவ்வியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், அந்த திகதி இறுதியானது என்ற போதிலும், சில ஆவணங்கள் சென்று சேர காலமெடுக்கும் என்பதால், அந்தத் திகதிக்கு பின்னர் அவை கிடைத்தாலும் அவை நிராகரிக்கப்படும் என்று கூறமுடியாது என்று தெரிவித்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த முறைப்பாடுகளை செய்வதற்கான மின்னஞ்சல் முகவரி முடிவுத் திகதிக்கு பின்னரும் மூடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு ஆட்களின் ஆதரவுடன் போலியான முறைப்பாடுகள் செய்யப்படுவதற்கான முயற்சிகள் இலங்கையில் நடந்தமை குறித்தும் இலங்கை அரசாங்கம் கவலையடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளும், முறைப்பாடுகளுக்கு பிரதிபலனாக பணம் கொடுக்கும் நடவடிக்கைகளும் இலங்கையில் நடந்ததாக அந்த அறிக்கை கூறுகின்றது. அதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதி மாற்றப்பட்டதற்கான உரிய காரணம் ஐ.நா பேச்சாளரால் இதுவரை கூறப்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Tags: , ,

Leave a Reply