நிர்பயா பாலியல் வழக்கு: தூக்குத்தண்டனைக்கான புதிய திகதி அறிவிப்பு!

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வரும் 20-ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடுரமாகத் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் ஜனவரி 22-ஆம் திகதி அதன் பின் பெப்ரவரி 1-ஆம் திகதி என நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனை குற்றவாளிகளின் மேல்முறையீடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 3-ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குடியரசுத் தலைவருக்கு மார்ச் 2-ஆம் திகதி கருணை மனுத் தாக்கல் செய்தார். இதன் காரணமாக 3-ஆம் திகதியும் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, நால்வருக்குமான அனைத்து சட்டவாய்ப்புகளும் நிறைவடைந்துள்ளன. இதனால், திகார் சிறை நிர்வாகம் சார்பில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுக்கான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகளுக்கும் அவர்களது பிரதிநிதிகளுக்கும் தூக்கிலிடுவது தொடர்பான அறிக்கை சட்டத்துக்குட்பட்டு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான அனைத்து சட்டவழிமுறைகளும் முடிந்துவிட்டன. எனவே, நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய ஆணையைப் பிறப்பிக்கவேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட குற்றவாளி பவன்குப்தாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும். பவன்குப்தாவின் சார்பாக மீண்டும் கருணை மனுத் தாக்க செய்யவுள்ளேன். நான் இன்று பவன் குப்தாவை சிறையில் சந்திக்கவுள்ளேன்.

பின்னர், மீண்டும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரையில் எந்த மறு கருணை மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதுவரையில் மறு கருணை மனு தொடர்பாக எந்த தகவலும் திகார் சிறை நிர்வாகத்துக்கு வரவில்லை என்று கூறினார். அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங், மறு கருணை மனு என்பது மரண தண்டனை விதிக்கப்பட குற்றவாளிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. திகார் சிறை நிர்வாகம் மறு கருணை மனு குறித்து குற்றவாளியிடம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புதிதாக மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணையைப் பிறப்பிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் ஒப்புக்கொண்டார். இதனால் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் அனுப்பிய மனுவின் நிலை குறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு திகார் சிறை கண்காணிப்பாளருக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று எளிதாக கூறி இதிலிருந்து நீங்கள் விலகிவிட முடியாது. குற்றவாளிகளுக்கான வழக்கறிஞர்கள் ஏ.பி.சிங் மற்றும் ரவி குவாசி ஆகியோர் சட்டத்துக்குட்பட்டு குற்றவாளிகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மார்ச் 20-ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று புதிய ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!