இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது விட்டால் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு வழங்கிய செல்விலேயே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் நவிப்பிள்ளை வாய்மூல அறிக்கை ஊடாக, இலங்கை மீதான சர்வதேச மனிதவுரிமைகள் விசாரணைகள் குறித்து விபரித்திருந்தார்.
எனினும்,அவரின் வாய்மூல அறிக்கை, ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவினால் மறுக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த ஆட்சேபனை தொடர்பில் அவுஸ்திரேலிய வானொலியின் ஊடகவிலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கல் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு என்பது அவர்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது.அதில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் அவர்களின் பரிந்துரைகளை அவர்களே அமுல்படுத்தவில்லை. அதனையடுத்தே இதனை நான் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் குறுகிய தன்மையைக் கொண்டுள்ளதுடன், அது எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாக இல்லை. அவர்களது பரிந்துரைகள் கூட அமுல்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் எனது மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என நவநீதம்பிள்ளை தமது செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
















