வடமாகாணசபையின் பேரவைத் தவிசாளராக சி.வி.கே.சிவஞானம்

sivaganamபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள வடமாகாணசபையின் பேரவைத் தவிசாளராக சி.வி.கே.சிவஞானமும் பிரதிப் பேரவை தவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

வடமாகாண சபையின் பேரவைத் தவிசாளராக சி.வி.கே.சிவஞானத்தை மாகாணசபை உறுப்பினரான குருகுலராசா முன்மொழிய பொ.ஐங்கரநேசன் வழிமொழிந்தார். பிரதிப் பேரவைத் தவிசாளராக அன்ரனி ஜெகநாதனை மாகாணசபை உறுப்பினர் ம.சத்தியலிங்கம் முன்மொழிய பா.டெனீஸ்வரன் வழிமொழிந்தார்.

வடமாகாணசபையின் கன்னி அமர்வு நேற்று காலை 9.30 மணியளவில் வடமாகாண சபை செயலாளர் கிருஸ்ணசாமியின் தலைமையில் ஆரம்பமானது. அமர்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டிருந்த 30 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சியின் சார்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர அங்கஜன் இராமநாதன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸி உறுப்பினர் எம்.ரைஸ் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். சபையின் பார்வையாளர் அரங்கில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.

சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில் வடமாகாண சபை அமர்வை நடத்துவதற்கான ஆளுநர் சந்திரசிறியின் பிரகடனத்தை சபையின் செயலாளர் கிருஸ்ணசாமி மும்மொழிகளிலும் வாசித்தார். இதனையடுத்து மாகாணசபைக்கான பேரவைத் தலைவர் நியமனம் தொடர்பில் செயலாளர் அறிவித்தார். பேரவைத் தலைமைப் பதவிக்கு ஒருவருக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் செயலாளர் அறிவித்தார். இதனையடுத்து வடமாகாணசபைப் பேரவையின் தலைவராக சி.வி.கே.சிவஞானம் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.

சி.வி.கே.சிவஞானம் தான் பேரவைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து அவருக்கான விசேட அங்கியை அணிவிப்பதற்காக அவர் அழைத்துச்செல்லப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட வடமாகாண சபையின் செயலாளர் கிருஸ்ணசாமி மாகாணசபை முறைமையின் கீழ் பிரசவிக்கப்பட்ட கடைசி குழந்தையாக வடகமாகாணசபை காணப்படுவதாகவும் ஏனைய மாகாணசபைகளுக்கு வடமாகாண சபை முன்னுதாரணமாக திகழவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் மாகாணசபை உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் மற்றும் கூட்டு குழுக்களை நியமிப்பது தொடர்பாகவும் சபையின் செயலாளர் அறிவுரை வழங்கினார்.

மேலும் வடமாகாணசபைக்கென தற்போது தற்காலிக செங்கோல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வடமாகாணத்தின் கலாசாரத்தையும தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் செங்கோல் ஒன்றை தயாரித்துக்கொள்ளுமாறும் வடமாகண சபை செயலாளர் கிருஸ்ணசாமி கோரிக்கை விடுத்தார். மாகாணசபை உறுப்பினர்கள் செயற்படும் விதம் தொடர்பாக ஒழுக்கக்கோவை ஒன்றை தயாரித்துக்கொள்ளுமாறும் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் இன்றைய தினம் (நேற்று) சபையில் உறுப்பினர்கள் எவ்வாறு வேண்டுமானாலும் அமர்ந்துகொள்ளலாம் எனினும் அடுத்த அமர்விலிருந்து உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் அமர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பேரவைத் தவிசாளருக்குரிய அங்கியை அணிந்துகொண்டு சி.வி.கே.சிவஞானம் சபையை வந்தடைந்தார். இதனையடுத்து அவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பரமாணம் செய்துகொண்டு மூலாசனத்தில் சென்று அமர்ந்ததுடன் சபையை கொண்டுநடத்தும் பொறுப்பை சி.வி.கே.சிவஞானத்திடம் செயலாளர் கிருஷ்ணசாமி ஒப்படைத்தார்.

அதன் பின்னர் பிரதி பேரவை தவிசாளர் நியமனம் தொடர்பில் பேரவைத் தலைவர் அறிவித்ததுடன் பிரதிப் பேரவைத் தவிசாளராக அன்ரனி ஜெகநாதனை மாகாணசபை உறுப்பினர் ம.சத்தியலிங்கம் முன்மொழிய பா.டெனீஸ்வரன் வழிமொழிந்தார். அந்த வகையில் அன்ரனி ஜெகநாதன் போட்டியின்றி பிரதிப் பேரவைத் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை வடமாகாண சபையின் முதலாவது கன்னி உரையை நிகழ்த்துமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் சபையின் தவிசாளர் அழைப்பு விடுத்தார்.

Tags: ,

Leave a Reply