யுத்த காலத்தில் முப்படையினருமாக 28ஆயிரம் பேர் உயிரிழப்பு; பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

defenceஇலங்கையில் 1980ஆம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் 28ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால் முப்படைகளையும் சேர்ந்த 24 ஆயிரத்து 992 பேரும் பொலிஸ் படையில் 2 ஆயிரத்து 159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இராணுவ வைத்தியசாலைகளில் நிகரான இடங்களிலும் 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை போரில் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக இதுவரை 92 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல 1971 மற்றும் 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் காரணமாக முப்படைகளைச் சேர்ந்த 883 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 320 பேர் அங்கவீனமாயுள்ளனர். இவர்களுக்கும் நஷ்ட ஈடாக 38 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply