2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக கருணாநிதி மனைவி தயாளுவிடம் சி.பி.ஐ., தரப்பில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது தயாளு முழு ஒத்துழைப்பு அளித்ததாக சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார். விசாரணையின் போது, 120 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், கலைஞர் தொலைக்காட்சி நடத்தியதில் எனக்கு எவ்வித நேரடி பங்கும் இல்லை என்றும், இது தொடர்பான விஷயங்கள் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தயாளு கூறினார். சில ஆவணங்களில், அவரது கையெழுத்து குறித்து கேட்டபோது ஒப்புக் கொண்டார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில், அவரது மனைவி தயாளுவிடம், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான சாட்சியத்தை, எழும்பூர் நீதிமன்ற முதன்மை மாஜிஸ்திரேட் கோபாலன் இன்று பதிவு செய்தார்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில், கலைஞர் “டிவி’க்கு, 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, பங்குதாரரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு, நேரில் ஆஜராக வேண்டும் என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக தயாளு சேர்க்கப்பட்டுள்ளார். டில்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் நிலையில், அவரது உடல் நிலை சீராக இல்லை. எனவே, அவருக்கு, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தயாளுவின் மகள் செல்வி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, எழும்பூர் நீதிமன்றத்தின் முதன்மை மாஜிஸ்திரேட், தயாளுவின் வீட்டிற்கு சென்று, அவரிடம் சாட்சியத்தை பதிவு செய்யும்படி, சி.பி.ஐ., நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, இன்று காலை, 10:00 மணிக்கு கோபாலபுரம் வீட்டிற்கு, எழும்பூர் நீதிபதி கோபாலன் சென்றார். அங்கு, தயாளுவிடம் சாட்சியம் பதிவு செய்தார். மொத்தம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள, கனிமொழி எம்.பி., கலைஞர், ‘டிவி’ முன்னாள் இயக்குனர் சரத்குமார், கரீம் மொரானி, ஆசீப் பால்வா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
















