பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாணப் பயணம் தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. “கமரூன் யாழ்ப்பாணம் சென்றமை குறித்து மகிழ்ச்சியடையவில்லை” என்று பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்திருந்த, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பின்னர், “உதயன்’ அலுவலகத்துக்கும் அவர் வந்திருந்தார்.
இதன் பின்னர் வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலன்புரி நிலையத்துக்கும் அவர் சென்றார்.
பிரிட்டன் பிரதமரின் வடக்குப் பயணம் தொடர்பில் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் தி.மு.ஜயரத்ன, கமரூனின் யாழ்ப்பாண பயணம் குறித்து மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூறினார்.
















