மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரை இராணுவம் எப்படித் தடுக்க முடியும்? நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்வி

sumanthiran1“வடக்கில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது என அரசு கூறினாலும், வடமாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் தமது மாகாணத்தில் ஒருசில இடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது வடக்கில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்குச் சிறந்த உதாரணமாகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள கோயில்கள், பாடசாலைகள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதைப் பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாலை அங்கு சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை படையினர் அங்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற் றியபோதே சுமந்திரன் மேற்கண்ட விடயம் குறித்து கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:-

வடமாகாணத்தின் வளர்ச்சி 25 வீதமாக அதிகரித்துள்ளது என அரசு கூறுகிறது. அது பொய். வடமாகாண வளர்ச்சி குறித்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்தை அவர் வாபஸ் பெற்றார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் உயிரிழந்திருந்தார். இது தற்கொலை என்றுதான் நாம் நினைத்தோம். ஆனால், அது கொலை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எவ்வாறிருப்பினும், மரணித்த அவரது குடும்பத்துக்கு நாம் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அண்மையில் வல்வெட்டித்துறை பிரதேசசபை உறுப்பினரின் வீடு தாக்கப்பட்டது. அத்துடன், கரவெட்டி, சாவகச்சேரி, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.

வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு முன்னால் மலர் வளையம் வைக்கப்பட்டது. ஏன் இவை நடக்கின்றன?

வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் கடந்த 22 வருடங்களாக இருந்த நடேஸ்வரா கல்லூரி, அம்மன், பிள்ளையார் ஆலயங்கள் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதைப் பார்வையிடச் சென்ற வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டார்.

ஒரு மாகாண முதல்வர் தமது மாகாணத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் செல்வதை எப்படித் தடுக்க முடியும்? வடக்கில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது என அரசு கூறுகிறது.

ஆனால், வடக்கு மக்களின் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அந்த மாகாணத்தின் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டவர். தமது மாகாணத்தின் ஒருசில இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லமுடியாது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டார்.

இது வடக்கில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்குச் சிறந்த உதாரணம் அல்லவா?
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கு மக்கள் இன்னும் ஏன் இழிவுபடுத்தப்படுகின்றனர்?

இறந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க நாம் தயாராக இருக்கிறோம். அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – என்றார்.

Tags: , , , , ,

Leave a Reply