பிரிட்டன் எம்.பிக்கள் குழு அரச செலவிலே அழைப்பு; ஒத்துக்கொண்டார் அமைச்சர் பீரிஸ்

peries2இலங்கையின் நிலவரங்களை நேரில் கண்டறிந்து கொள்வதற்காகப் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசின் செலவில் அழைத்து வந்தமை உண்மைதான் என்று நேற்றுச் சபையில் ஒப்புக்கொண்டார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரிட்டன் அரசின் செலவில் அங்கு சென்று விடயங்களை ஆராய்ந்த சம்பவங்களும் இதற்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற பொதுநிர்வாக, உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டுக்கு அரச தலைவர்கள் வந்தபோது இஸ்ரேல் விமான மொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவிர குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கும் பொதுநலவாய அமைப்புக்கும் என்ன தொடர்பு என்று அவர் கேட்டிருந்தார்.

பொதுநலவாய மாநாடு நடைபெற்றபோது, அதற்குச் சமாந்தரமாக வணிக மாநாடும் நடைபெற்றது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகித்து வந்த நாடுகளின் முன்னணி வர்த்தகர்கள் வர்த்தக மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலும் கடந்தமுறை இப்படித்தான் நடைமுறை பின்பற்றப்பட்டது. எனவே, அடிப்படைத் தகவல்கள் தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள இதுதொடர்பில் பேசியமை கவலையளிக்கின்றது.

குறிப்பாக, பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்காத 14 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்கள் வணிக மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். இதில் இஸ்ரேலிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

எல்.ஆர்.குரூப் என்ற நிறுவனத்தின் தலைவரும் அந்த நிறுவனத்தின் வாகனத்தில் இதற்கு வந்திருந்தார். இதில் என்ன தவறு உள்ளது?

அதேவேளை, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலை கொடுத்து வரவழைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே, இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தும் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் பிரிட்டனிலுள்ள விடயங்களை ஆராயும் பொருட்டு அங்கு சென்றிருந்தோம். இதற்குப் பிரிட்டனே பெரும் பகுதி பணத்தை செலுத்தியிருந்தது.

எமது நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன் சென்றிருந்தபோது அந்நாடு செலவிட்டதைப்போன்று அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கு வருமாறு நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

இங்கு வந்து நிலைமைகளை நேரில் பார்த்ததன் பின்னர் அவர்கள் கேள்விப்பட்டிருப்பதை விடவும் நிலைமைகள் வித்தியாசமாகவும் முன்னேற்றமாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் இங்கு வந்த பின்னர் உண்மையை அறிந்துள்ளனர். அதற்கான வாய்ப்பை வழங்குவது எமது பொறுப்பாகும்.

அதேவேளை, ஜனாதிபதியின் இணைப்புச் செயலர் ஒருவர் குறித்தும் மங்கள எம்.பி. குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்படியான ஒருவர் ஜனாதிபதி செயலகத்தில் இல்லை. அவர் கூறிய பெயரை உடையவருக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – என்றார்.

Tags: , , ,

Leave a Reply