சர்வதேசத்தை ஏமாற்றவே பேச்சுகளுக்கு திடீர் அழைப்பு; அரசு கபட நாடகம்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

world-flagஅனைத்துலக சமூகத்தை ஏமாற்றி ஜெனிவாக் கூட்டத் தொடரில் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்காக மஹிந்த அரசு அரங்கேற்றியுள்ள நாடகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாகும் என பிரதான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அத்துடன், தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணவேண்டும் என்ற உண்மையான மனோநிலை இந்த அரசிடம் இல்லை என்றும் அவை சுட்டிக்காட்டின.

நாடாளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் பதிலுரையாற்றிய ஐனாதிபதி மஹிந்த ராஜபக்­, “உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குப் பிற நாடுகளில் தீர்வைத் தேடுவதை விட தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் உள்நாட்டிலேயே எமக்குப் பொருத்தமான தீர்வைக் காண்பதற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்களும் அரசுடன் கைகோர்க்க வேண்டும்” என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஐனாதிபதியின் இந்த அழைப்புத் தொடர்பில் தமது கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிபடுத்துகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோ­லி­க்கட்சி ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் மேற்படி கருத்தை வெளியிட்டனர்.

இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைமைத்துவ சபையின் உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவிக்கையில்,

“போர் முடிவடைந்தும் கூட தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. காரணம் இந்த அரசுக்கு இவர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்கவேண்டும் என்ற உண்மையான அக்கறையும், மனோநிலையும் இல்லை. தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் சிறந்த தீர்வை அரசு கண்டறிந்ததன் பிறகே ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், இங்கு அப்படியல்ல. இது வெறும் நாடகமாகும். அதாவது, ஜெனிவாக் கூட்டத்தில் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியே இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பை அழைத்து இந்த அரசு நாடக மாடுகிறது” என்றார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்ததாவது,

இனப்பிரச்சினையைத் தீர்க்க கூட்டமைப்பை இந்த அரசு அழைக்க வேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால், இந்த அரசுக்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையான ஆசனங்கள் இருக்கின்றன.

இந்தப் பெரும்பான்மையான பலத்தை வைத்தே தமிழர்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும். அதுமட்டுமல்ல, அரசுக்கு தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால், போர் முடிவடைந்தவுடனேயே அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றை செய்யாது கூட்டமைப்பை அழைப்பது சர்வதேசத்தை ஏமாற்ற அரசு செய்யும் ஒருவித்தை இது. கூட்டமைப்பு அரசோடு கைகோர்க்காவிட்டால் வடக்கில் சிவில் ஆளுநரை நியமித்து அங்குள்ள காணிகளை மீண்டும் தமிழர் களுக்கே கொடுக்க ஜனாதிபதியால் முடியாதா? முடியும். ஆனால், செய்யாது. காரணம், இந்த அழைப்பானது ஐ.நாவிலிருந்து தப்பிக்கவும், கூட்டமைப்புடன் சேர்த்து ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்ற அரசினால் போடப்பட்ட திட்டமாகும் என்றார்.

ஐக்கிய சோ­லிஸக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிக்கையில்,

“கூட்டமைப்புடன் இணைந்துதான் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அரசு நினைத்திருந்தால் 2009 ஆம் ஆண்டே இனப்பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும். இதையயல்லாம் விடுத்து தற்போது கூட்டமைப்பை தீர்வுக்கு அழைப்பதானது அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் தப்பிக்கவே ஒழிய வேறெந்த நோக்கமுமில்லை” என்றார்.

நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு தெரிவிக்கையில்,
ஒரு பொய்யான செயற்பாடையே இந்த அரசு செய்து வருகிறது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால் முதலில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், வடக்கிலுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.

இவை மட்டுமன்றி மாகாணசபைகளுக்குள்ள அதிகாரத்தை அவர்களுக்கே கொடுக்க வேண்டும். இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண நினைப்பது முடியாத ஒன்றாகும்” என்றார்.

Tags: , , ,

Leave a Reply