அரசு, கடன்களைப் பெறுவதற்காக மத்திய வங்கி மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்களைத் திரிபுபடுத்தி வெளியிடுகிறது எனத் தெரிவித்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இது விவகாரம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், 2013ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் 5.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை 6 சதவீதமாக மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என இலங்கை குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தேசிய கணக்குப் பிரிவு பணிப்பாளரே வாக்கு மூலம் அளித்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிதி திட்டமிடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு குடும்பமும், அதற்கு நெருக்கமானவர்களும் மட்டுமே பொறுப்புக் கூற வேண்டும். அதைவிடுத்து, பி.பி.ஜயசுந்தரவை குற்றஞ் சாட்டுவதில் பயனில்லை. மத்திய வங்கியின் பொருளாதாரத் தகவல் பற்றி மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், இன்று அதை நீங்கள் இல்லாது செய்துள்ளீர்கள்.
2013ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.5 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 6 சதவீதமாக மாற்றுமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என இலங்கை குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தேசிய கணக்குப் பிரிவின் பணிப்பாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்புக் கூறவேண்டும்.
மத்திய வங்கி மற்றும் புள்ளி விவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் இரவு நேரங்களில் தொலைபேசி அழைப்புகளூடாக திரிபுபடுத்தப்படுகின்றன. எனவே, இது குறித்து ஆராயப்படவேண்டும் – என்றார்.
















