இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள் தொடர்வதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியீட்டியிருந்தனர்.
எனினும், கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள், முன்னாள் போராளிகளுக்கு, ஆதரவாளர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்றது.
இந்த அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றதுடன், இலங்கை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரித்தே உலகத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
எனினும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் புலிகளே சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் அரசாங்கம் அறிவித்து வருகின்றது.
யுத்த காலத்தில் சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என தமிழ்த் தரப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
யுத்த நிறைவில் உயிருடன் சரணடைந்த பலர் பற்றிய தகவல்கள் கிடையாது என அவர்களது உறவினர்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்றது.
முன்னாள் புலி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன் விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரனை சந்தித்தோம்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கணவனை இழந்த பெண்களின் குழுவிற்கு ஆனந்தி தலைமை தாங்கி, காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு பொதுநலவாய நடுகள் தலைவர்கள் அமர்வின் போது யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றை நடத்தியிருந்தார்.
தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்படுவோர் துன்புறுத்தப்பட்டதாகவே தங்களது அனுபவங்களை பகிர்கின்றனர்.
2006 – 2012ம் ஆண்டு வரையில் உத்தியோகபூர்வ மற்றும் இரகசிய தடுப்பு முகாம்களில் 75 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் கடந்த ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது தம்மை படையினரும், காவல்துறையினரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வடக்கு பெண் போராளி ஒருவர் முறைப்பாடு செய்தார்.
படையினர் மேற்கொண்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களினால் தாம் கருவுற்றதாக மற்றுமொரு பெண் போராளி எம்மிடம் நேரடியாகத் தெரிவித்தார்.
2009ம் ஆண்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் சகோதரர், இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பரிமாறிக் கொண்டார்.
23 ஊடகவயிலாளர்கள் புலம்பெயர்ந்து வேறும் நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர்.
ஊடக சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளதாக பல ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான அல்லது மாற்றுச் சிந்தனையுடன் கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
2006ம் ஆண்டின் பின்னர் குறைந்தபட்சம் 16 ஊடகப் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணும் வடக்கு தமிழர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக உயர் இராணுவ அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், வெளிநாடுகளில் வாழ்வதற்காக சில தரப்பினர் படையினர் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
எவ்வாறெனினும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையிலான பொறிமுறையொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என மனித உரிமை ஆர்வலர்கள் எம்மிடம் கூறினர் என அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
-GTN
















