நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரவு தருமாறு சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. போரால் இடம்பெயர்ந்த 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும், காணாமற்போன ஆயிரக்கணக்கானோரைத் தேடுவதற்கும் மேலும் கால அவகாசம் தேவை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், வெளிவிவகார அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும், அதன் பிரஜைகளின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிப்பதற்கும் இலங்கை தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டுள்ளது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களிடம் நிறுவனங்கள் இருக்கின்றன. மூலவளங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் எங்கள் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம். எங்கள் பொருளாதாரத்தைத் தொடர்ந்து பலப்படுத்துவோம். எல்லோருக்குமான கெளரவமான வாழ்வுக்கு உத்த ரவாதமளிப்போம். அவர்களின் சமயம், இனம், அரசியல் ஈடுபாடு எவையாகவும் இருக்கலாம். பாரபட்சமற்ற முறையில் எங்கள் பணிகள் தொடரும்” என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. எங்கும் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் பரவலாகத் தென்படுகின்றன. எங்கள் நாட்டில் எங்கு சென்றாலும் இவற்றை உங்களால் அவதானிக்கமுடியும்.
முப்பது வருடகால சண்டையால் ஏற்பட்ட குளறுபடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு நல்லிணக்கப்பாட்டு ஆணைக்குழு வகுத்துள்ள 300 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. நாட்டின் வடபகுதியில் கண்ணிவெடி அகழ்வுப் பணி நிறைவடைந்துள்ளது. 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூகத்தில் மீள சேர்க்கப்பட்டுள்ளார்கள். சமத்துவமான உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகையில் அதிகளவில் தமிழர்களைக் கொண்ட வடமாகாணத்தில் மீன்பிடித் தொழில், விவசாயம், பொருளாதாரத்துறை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிர முதலீட்டுத்திட்டங்கள் கூடிய பலன்களை அளித்துள்ளன. சமீப வருடங்களில் 22 சதவீத வளர்ச்சியை வடமாகாணம் எட்டியுள்ளது.
வீடுகள், நெடுஞ்சாலைகள், பாடசாலைகள், மருத்துவ மனைகள் ஆகியவற்றை மீளக்கட்டி எழுப்புவதற்கும், இதர சமூக நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கும், போரால் இடம்பெயர்ந்த 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும், காணாமற்போன ஆயிரக் கணக்கானோரைத் தேடுவதற்கும் மேலும் கால அவகாசம் தேவை. எனினும், மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளில் அபிவிருத்திகளைக் காணக் கூடியதாக உள்ளது.
2012ஆம் வருட மார்ச்சிலும், 2013 ஆம் வருட மார்ச்சிலும் ஐ.நா. மனித உரிமைகள் சபை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் துரிதமடையுமாறு இலங்கையை வலியுறுத்தும் இரு தீர்மானங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் சபை இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்யும். அச்சமயம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைக் கண்காணிக்க சுயாதீனமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு அநேக மேற்கத்தேய நாடுகள் இலங்கையைக் கோரக்கூடும்.
எனினும், அச்சுறுத்தலும், சர்வதேச அழுத்தங்களும் நாங்கள் முன்நோக்கிச் செல்ல ஒரு வழியை அமைக்காது. சர்வதேச சமூகம் நம்பிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
தம்மால் தெரிவுசெய்யப்பட்ட தராதரங்களை இலங்கை மீது திணிப்பது ஒரு தவறான நடவடிக்கையாகும். ஐ.நா. மனித உரிமைகள் சபை தனது சொந்தத் திறமைகளின் அடிப்படையில் இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும்.
இலங்கை மேற்கொண்டுள்ள சுயாதீன வழிக்கு எதிராக சில அரசுகள் செயற்படுகின்றன. வெளிநாடுகளில் குடியேறி பொருளாதார வளங்களுடன் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இந்த அரசுகள் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன என்றார் அவர்.
















