யாழிற்கு 86 தமிழ் பொலிஸார் நியமனம் 100 வீதம் தமிழ் மொழியில் சேவை; என்கிறார் ஓ.ஐ.சி

samansikaraயாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மொழியிலேயே முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் பயிற்சி முடித்து அண்மையில் வெளியேறிய 86 தமிழ் பொலிஸார் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தற்போதும் இங்குள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலமாகவே முறைப்பாடு பதிவு செய்யப்படுவதுடன் போதியளவு தமிழ் பொலிஸாரும் உள்ளனர்.

மேலும் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்களில் பெரும்பாலானோர் தமிழ் தெரியாதவர்கள் அதனால் எதிர்வரும் காலங்களில் தமிழ் தெரிந்தவர்களே கடமையாற்றுவார்கள்.

தற்போது யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் தமிழ் தெரியாத பொலிஸாருக்கு விசேடமாக தமிழ் பயிற்சி வகுப்புக்கள் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் போது சிங்கள மொழியில் பேசுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன் வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் போது தவறான முறையில் செலுத்தும் வாகனங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவதற்காக போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குற்றம் என்ன என்று கூட தெரியாத நிலையில் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply