ஊழலை பொருத்த வரை முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகட்டும், பா.ஜ.க.வினர் ஆகட்டும், ஆம் ஆத்மி கட்சியினர் ஆகட்டும், அவர்களோடு சமரசமாக போகும் பேச்சுக்கே இடமில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் வர்த்தன் என்னிடம் தெரிவித்தார். ஊழல்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை கொடுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளேன்.
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டேன். ஊழலோடு சமரசம் என்ற பேச்சுக்கே என்னிடம் இடமில்லை. ஊழலை எதிர்த்து போராடுவதில் எனது ஆயுட்காலம் வரையில் உறுதியுடன் நிற்பேன்.
அது ஷீலா தீட்சித் ஆகட்டும், அவரது அமைச்சர் ஆகட்டும், எவ்வளவு பெரிய அரசு அதிகாரி ஆகட்டும் அல்லது காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினர் ஆகட்டும், ஏன்… எங்களது ஆம் ஆத்மி கட்சியினர் ஆகட்டும். ஊழல் செய்பவர்கள் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியின் போது ஊழல் தடுப்பு பிரிவின் பல பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன. உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் போன்ற பதவிகள் காலியாகவே கிடந்தன.
30 இன்ஸ்பெக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 11 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த பதவிகளில் எல்லாம் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். பொது மக்களிடம் இருந்து அரசு அதிகாரிகளின் ஊழல்கள் தொடர்பான புகார்களை பெற தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
இந்த பிரிவுக்கு மக்கள் அனுப்பும் புகார்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் அல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
















