போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்; ஒபாமாவிடமும் நவியிடமும் சொல்லுங்கள் என கோஷம்

clombo-demo“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ஸ்ரீபன் ஜே.ராப் என்ன நீதிபதியா? இலங்கை இராணுவத்தைப் போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல இடமளியோம் என்பதை ஒபாமாவிடமும், நவநீதம்பிள்ளையிடமும் ஸ்ரீபன் ஜே.ராப் கூறவேண்டும்.” – இவ்வாறு கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் நேற்றுக் கோஷம் எழுப்பப்பட்டது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச குற்றவியல் நீதித்துறை அலுவலகத்துக்குப் பொறுப்பான அமெரிக்கத் தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் என்ற சிங்கள அமைப்புகளின் கூட்டணியில் ஆர்ப்பாட்டப் பேரணியயான்று நேற்றுக் காலை நடத்தப்பட்டது.

இதனால் தூதரக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், தூதரகத்தின் முன்னால் உள்ள காலி வீதியின் ஒரு வழிப் பாதை என்பன மூடப்பட்டிருந்தன.

“அநீதியான போர்க்குற்ற விசார ணையை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்’ என்ற தொனிப் பொருளில் நேற்று முற்பகல் 10.15 மணிமுதல் 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட மேலும் சில பெளத்த அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.

முற்பகல் 10.15 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிச் சென்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீபன் ஜே.ராப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட – அவருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும், அமெரிக்காவுக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் கையிலேந்தி எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர்.

“புலிகளுடன் இணைந்து இலங்கை இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்ற விசார ணையை மேற்கொள்ளவே ஸ்ரீபன் ஜே.ராப் இலங்கை வந்துள்ளார்”, “போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஸ்ரீபன் ஜே.ராப் நீதிபதியா?”, “இலங்கை இராணுவம் மனித பாதுகாப்புக்காகத்தான் கொலை செய்தது.

“இலங்கை இராணுவத்தைப் போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தவிடமாட்டோம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடமும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் ஸ்ரீபன் ஜே.ராப் சென்று கூற வேண்டும்” – என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

Tags: ,

Leave a Reply