முல்லைத்தீவில் நடைபெற்ற விசேட தேவைக்குட்பட்ட முன்னாள் போராளிகளின் கலாசார நிகழ்வில் புகுந்த பொலிஸார் அந்த நிகழ்வைக் குழப்பினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்யக்கூடாது எனத் தடுத்து ஒளிநாடாவையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசேட தேவைக்குரிய முன்னாள் போராளிகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு எதிராகச் சர்வதேச ரீதியில் செயற்பட முனைந்தமையினாலேயே குறித்த ஒளிநாடா பறிமுதல் செய்யப்பட்டதாக முள்ளியவளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.திலகரட்ன தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவமோகனால் முள்ளியவளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டன. இலவசக் கண்ணாடி விநியோகம் மற்றும் முன்னாள் போராளிகளின் கலை நிகழ்சிகள் என்பன இதில் இடம்பெற்றன.
முன்னாள் போராளிகளில் விசேட தேவைக்குரியவர்களின் கலை நிகழ்சிகள் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பொலிஸார் நிகழ்வை நிறுத்துமாறு தெரிவித்தாகவும், தாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து நிகழ்வை நடத்தியதாகவும் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் சிவமோகன், நிகழ்வின் இறுதியில் மண்டபத்துக்குள் புகுந்த பொலிஸார் நிகழ்வை குழப்பிவிட்டனர் எனவும் கூறினார்.
அத்துடன் பொலிஸாருடன், சிவில் உடை தரித்த இராணுவத்தினர் 20 பேர் மற்றும் புலனாய்வாரள்கள் 50 பேர் வரை அங்கு வந்திருந்ததாக வும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தவரின் ஒளிநாடாவை (வீடியோ கசட்) முள்ளியவளைப் பொலிஸார் பறித்துச் சென்றதாகவும் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திலகரட்ணவை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது.
அத்துடன் விசேட தேவைக்குரிய முன்னாள் போராளிகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு எதிராகச் சர்வதேச ரீதியில் செயற்பட முனைவதை அனு மதிக்க முடியாது என அவர் ‘உதயனுக்கு’ தெரிவித்தார்.
















