நீங்க நல்ல நடிகர்தானுங்கோ! : யாழ்ப்பாணத் தம்பி

Maki-ponkalஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பண்பாட்டை எப்படியெல்லாம் மதிக்கிற ஒரு உன்னத தலைவர்! என்று இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ஒருவர் நினைக்க வேண்டும் என்பதே மகிந்த ராஜபக்சவின் ஆசை. தைப் பொங்கலையும் தனது இனவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு ராஜபக்ச பயன்படுத்துவார் என்று இதற்கு முந்தைய பத்தியில் எழுதியிருந்தேன். அது எதிர்பார்த்ததைவிட அதிகமாக நடந்திருக்கிறது.

இன வெறி – இனப்படுகொலையை செய்த ஜே.ஆர்.ஜெயவர்தனவோ அல்லது மகிந்தவுக்கு முன்பாக இலங்கையை ஆண்ட சந்திரிக்காவோ தமிழில் பேசி தமிழர் இதயங்களை வெல்ல முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழைக் கொலை செய்தேனும் தமிழில் பேசி தமிழ் மக்கள்மீது அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தலைவன் நான் என்று காட்ட மகிந்த முயன்றுகொண்டே இருப்பவர்.

ஈழப் போர் நடந்துகொண்டிருந்தபோது ஐ.நாவில் ராஜபக்ச தமிழில் பேசினார். அப்போதெல்லாம் வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக ;கொண்டிருந்தனர். தமிழில் பேசிப் பேசியே தமிழ் மொழியை மாத்திரமின்றி தமிழ் மக்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் ராஜபக்ச. இப்பொழுது தமிழ் பொங்கலிலும் தன் அரசியலைத் தொடங்குகிறார்.

பொங்கலுக்கு வாழ்த்துத் தெரிவித்த ராஜபக்ச தைப் பொங்கலை இந்துக்களின் பண்டிகை என்றும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்லியிருந்தார். தைப் பொங்கல் தமிழ் மக்களின் பண்டிகை நாள். அது தமிழகத்திலும் ஈழத்திலுமே கொண்டாப்படுகிறது. அப்படியிருக்க இந்துக்களின் பண்டிகை என்று ராஜபக்சே சொல்லுவது எதற்காக?

பொங்கல் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிற ஒன்று என்றும் தனது ஞானத்தால் உணர்ந்து ராஜபக்ச திருவாய் மலர்ந்திருக்கிறார். உண்மையில் ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் என்பது ராஜபக்சவின் மொழியில் எப்படி அர்த்தம் கொள்கிறது என்பதை வைத்துப் பார்த்தால் அவரது சொல்லும் தமிழர் பொங்கல் நிகழ்வுக்கும் எதிர் எதிர் நிலை உண்டு.

எனது முந்தைய பத்தியில் சொன்னதைப் போல ராஜபக்சவின் படைகள் ஆனையிறவில் பொங்கலை செய்து தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். கிறிஸ்மஸ் மரங்களை மிக உயரமாக நடுவதாலும் பண்டிகை நாட்களில் இராணுவத்தின் இசைக்கச்சேரிகளை போடுவதாலும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது.

அண்மையிலும் இரண்டு தேவாலயங்கள் போலி மதவாதிகளால் உடைக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தாக்கப்பட்ட இந்து ஆலயங்கள் எண்ணிக்கையற்றவை. ஆலயங்களை அழிப்பதற்கான திட்டமிட்ட திருட்டுக்களால் வடக்கு கிழக்கு மாத்திரமின்றி தெற்கில் உள்ள ஆலயங்களும் இலக்காகின. பள்ளிவாசல்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான வன்முறைகள் வெளிப்படையாக நடக்கின்றன.

இவ்வாறு இன மத ஒடுக்குமுறைகளுக்குமான கட்டளையை இட்டுவிட்டு எதுவும் தெரியாத பிள்ளையாக கொழும்பில் பொங்கிக்கொண்டே தனது நடிப்பாற்றலை மகிந்த ராஜபக்ச நன்றாக வெளிப்படுத்துகிறார்.

இதையெல்லாம் செய்து கொண்டே ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் என்று ஜனாதிபதி பேசுவதைப் பார்க்கையில் தமிழ் பேசும் மக்கள் இன்னமும் அவதானமாகவே இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது.

-GTN, யாழ்ப்பாணத் தம்பி

Tags: , , , , ,

Leave a Reply