நாட்டில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகும் நிலை தற்போது உருவாகி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்.
மட்டக்களப்பு, திருப்பளுகாமம் இந்து கலாமன்றத்தின் 35ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்னும் சொற்ப காலத்தில், ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பவர்கள் பலர் அரசுடன் சேரும் சந்தர்ப்பங்களே அதிகரித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை தொடருமானால் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதுமட்டுமல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக மாறும்.
முன்பு அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தது போன்று கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனும் எதிர்க் கட்சித் தலைவராக வேண்டிய சூழல் உருவாகலாம். – என்றார்.
















