அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் தென்பகுதியில் வைத்து சுற்றுலா வழிகாட்டி ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்றைய தினம் பொலிஸ்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
ஆமைகள் ஆராய்ச்சி தொடர்பிலான கல்விச் சுற்றுலாவை மேற்கொள்வதற்காக குறித்த மாணவி, 15 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களுடன் இலங்கைக்கு வந்திருந்தார்.
இவர் ஆமைகள் தொடர்பான ஆராய்ச்சி நிமித்தம் அம்பலாங்கொட பகுதிக்கு அருகில் உள்ள கடலில் அமைந்திருக்கும் ஜென்டவன மலைக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்போது அவர் தம்முடன் வந்தவர்களிடம் இருந்து பிரிந்து தனித்திருந்த வேளையிலேயே இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரை வல்லுறவுக்குட்படுத்திய சுற்றுலா வழிகாட்டியை கைது செய்யநடவடிக்கை எடுத்த போது. குறிப்பிட்ட நபர் அந்தப் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், எனினும் அவரைக் கைது செய்வதற்கு நாடு முழுவதிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னர், சுற்றுலா மூலம் அதிக வெளிநாட்டு வருவாயை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீதான இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலைகள் பெரும் சவாலாகியுள்ளது
இதேவேளை ஏற்கனவே சில நாடுகள் இதுகுறித்து தமது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த வாரம் இலங்கை செல்லும் தங்களின் பிரஜைகள் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு, அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















