
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு மற்றும் நாவற்குழி உள்ளிட்ட பகுதியில் பெருமளவிலானோர் 1996ஆம் ஆண்டில் காணாமற்போனதற்கு குறித்த காலப்பகுதியில் நாவற்குழி படைமுகாமில் இருந்த இராணுவ அதிகாரி துமிந்தவே காரணம் என இன்றைய தினம் பலர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.
அதன்படி 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாவற்குழியில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றி வந்த துமிந்த தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை எங்குசென்றார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் இருக்கின்றோம் என சாவகச்சேரியில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாட்சியப்பதிவின் போது தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
அதன்படி எனது 2 மகன்மார் காணாமல் போனதுக்கு குறித்த துமிந்த என்ற இராணுவ அதிகாரியே காரணம் என தெளிவாக சாட்சியமளித்துள்ளார்.
அத்துடன் கடந்த 1996 ஆம் ஆண்டு மறவன்புலவு பகுதியில் இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிப்பதாக கூறி அழைத்துச் சென்று காணாமல் போன தனது கணவனை மீட்டுத்தருமாறு குடும்பப்பெண்னொருவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில்,
1996.7.19ஆம் திகதி மறவன்புலவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்பில் 175ற்கு மேற்பட்டவர்கள் ஆலடி சந்திப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தலையாட்டி முன் நிறுத்தப்பட்டனர்.
அவர்களில் 54 பேரை தலையாட்டியும் அடையாளப்படுத்தியது. அதில் எனது கணவரும். பின்னர் விசாரித்துவிட்டு விடுவதாக கூறி அழைத்துச் சென்றனர். எனது கணவருடன் கொண்டு செல்லப்பட்டவர்களில் 25 பேர் இன்றும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
கண்கட்டி கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே எனது கணவரை இராணுவம் கொண்டு செல்லும் போது கண்டது தான் நான் கண்ட கடைசி நாள் என்று கதறினார்.
மேலும் தனது சகோதரன் மறவன்புவவில் வைத்து இராணவ சுற்றிவளைப்பில் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்டார். இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்தார்.
எனினும் இன்றையதினம் 5 மேற்பட்ட சாட்சியங்கள் குறித்த துமிந்த என்ற இராணுவ அதிகாரிக்கு எதிராக இடம்பெற்றுள்ளது. எனினும் அன்றைய காலப்பகுதியில் 30 மேற்பட்டவர்கள் துமிந்த தலைமையில் காணாமல் போயிருந்ததாகவும் சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996.7.19 அன்றே பெண் ஒருவர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டு இன்று வரை எதுவித தகவலும் இல்லாத நிலையில் உள்ளனர்.
எனினும் இன்று கடந்த 1990 ஆம் ஆண்டிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலேயே சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதிலும் 96 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பிலேயே அதிக சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இந்த விசாரணைக்கு வருகைதந்தவர்களில் பலர் தமது பிள்ளைகள் , கணவன் , சகோதரன் என இராணுவமே கைது சென்று சென்றது என இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியங்களையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















