சிங்களக் குடியேற்றம் குறித்தும் ஜெனிவாவில் அமெ. அறிக்கை; நாவற்குழியில் சிங்களவருடன் சந்திப்பு

sri_lanka_flagநாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்களக் குடும்பங்களிடம் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிங்களக் குடியேற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அரச தரப்பை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்குக் கடந்த 19 ஆம் திகதி வருகை தந்த அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கல் ஏ. ஏர்வின் மற்றும் அவரது மொழிபெயர்ப்பாளர் ஆகியோர் நாவற்குழியிலுள்ள சிங்களக் குடியேற்றத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு தங்கியுள்ள 30 சிங்களக் குடும்பங்களிடம் அவர்கள் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இடம்பெயர்ந்தார்கள், இப்போது யாருடைய உதவியில் இங்கு தங்கியிருக்கின்றார்கள் என்பது தொடர்பான விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

இதன் பின்னர் மறுநாள் முல்லைத்தீவுக்குச் சென்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் குறித்த அதிகாரிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் நில அபகரிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் வடக்குகிழக்கு மாகாணங்களில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைள் தொடர்பான விவரங்களையும் அவர் ஆராய்ந்துள்ளார் என்று குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் இந்தப் பயணம் தொடர்பில், இது தமது வழமையான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. இதேவேளை அரச தரப்பு தெரிவிக்கையில், பிரிட்டன் தமிழர் பேரவையால் வடக்குகிழக்கின் காணி அபகரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் இடம் பெற்றதன் பின்னணியிலேயே இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா கூட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் ஜெனிவா அமர்வில் தரவுகளைச் சமர்ப்பிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைத்தது விடுதலைப் புலிகள்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சு, வடக்கிலிருந்த 20 ஆயிரம் சிங்களவர்கள், ஒரு லட்சம் முஸ்லிம்களை புலிகள் ஒரு மணி நேரத்தில் வெளியேற்றினர் என்றும் இதனூடாக இனப்பரம்பல் மாற்றியமைக் கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply