கூட்டமைப்புடன் பேசுவதில் அரசுக்குச் சிக்கல் இல்லை; அமைச்சர் ராஜித

tnalogo2அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் கூட்டமைப்புடன் அரசு இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம்.

தமிழ்க் கூட்டமைப்பும் இந்த நாட்டின் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அவர்க ளுடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை என்று மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கையில் விரைவில் நிறுவி அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசுடன் தீர்வுக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்த பின் னரே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரமுடியும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை மற்றும் தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆராய அரச தூதுக் குழு அந்நாட்டுக்கு சென்றுள்ளமை போன்ற விடயங்கள் குறித்து விவரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவின் செயற்பாடுகளை ஆராய அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா தலைமையில் அமைச்சர்கள் மட்டதூதுக் குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளது. மேலும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமோ விசேட பிரதிநிதி ஒருவரையும் கடந்த வாரம் நியமித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிடுகையில், தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்டதைப் போன்றதொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கையில் உருவாக்குவது சிறப்பான விடயமாக அமையும்.

அதனை விரைவில் ஆராய்ந்து இலங்கையில் அது போன்றதொரு குழுவை நியமிப்பதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அதாவது தென்னாபிரிக்காவில் நிறுவப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே அது பொருத்தமான செயற்பாடாக இருக்கும்.

தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நியமித்து செயற்படுத்துவதன் மூலம் அழுத்தங்களை குறைக்க முடியும். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தாலும் கொண்டுவராவிட்டாலும் அரசு உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை நியமித்து செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். எதிர் காலத்தில் அது சர்வதேச அழுத்தங்களை நிச்சயம் குறைக்கும்.

மேலும் தென்னாபிரிக்காவைப் போன்றதொரு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவழைத்து அரசியல் தீர்வுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதும் மிகவும் அவசியமாகும். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசுடன் பேச்சு நடத்தி நிகழ்ச்சி நிரல் குறித்த இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளமையினால் அரசு கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தலாம் என்றே நான் கருதுகின்றேன் என்றார்.

Tags: , ,

Leave a Reply