பொதுமக்களின் நிதிகள் தொடர்பான கட்டுப்பாட்டை நாடாளுமன்றம் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் வரி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க ஆளும் கட்சி மறுத்துள்ளது.
இது அரசியல் அமைப்பை மீறும் செயல் என்று கொழும்பின் ஆங்கில செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எனினும் அதற்கு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஸ் குணவர்த்தன பதில் வழங்க மறுத்துவிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்ற வகையில் இதற்கான பதிலை வழங்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களின் வரியிலேயே அரசாங்கத்தின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் ஜனாதிபதிக்கான செலவீனங்களுக்கும் நாடாளுமன்றமே அங்கீகாரம் வழங்குகின்றது.
இந்தநிலையில் ஏன் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விளக்கம் தரமுடியாது என்று கேள்வி எழுப்பினார்.
இதனை சபாநாயகர் சமல் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே இதே கேள்வியை ஜே.வி.பி எழுப்பியிருந்த போதும் அரசாங்க தரப்பு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















