நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் இடத்து சர்வதேசத்தில் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பிரதியமைச்சர் சந்திரசிறி முத்துக்குமார தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுக் காசோலை வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மொழியில் உரையாற்றி உங்களது மனங்களில் இடம்பிடிப்பதற்கு உரிய மொழி ஆற்றல் என்னிடம் இல்லாமையினை இட்டு வருத்தப்படுகின்றேன்.
ஒருவர் மற்றொருவருடன் கருத்துப் பரிமாறும் போது மனதைப் புரிந்து கொண்டு அவரது மொழியில் உரையாற்றும் போது தான் தேவையான விடயம் சரியாக சென்றடைகின்றது. அது தான் சரியான தொடர்பாடல் என ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.
எனவே ஒருவரது தாய் மொழி என்பது மிகவும் முக்கியமானது. அதன்படி உங்களுடைய தாய் மொழியில் உரையாற்றுவதற்கு எனக்கு தகுதி இல்லாது இருப்பது உண்மையில் வருந்தக் கூடிய விடயமாகும்.
மொழிப்பிரச்சினையினாலேயே கடந்த காலங்களில் பல்வேறு பிணக்குகள் நாட்டில் ஏற்பட்டது. எனவே அடிப்படைக் காரணம் அறியப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.
இதனால் நாட்டில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தனியான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த கால வரலாற்று தவறுகள் காரணமாக பல்வேறு கசப்பான அனுபவங்கள் வந்து மறைந்துள்ளன. அதனை பின்னோக்கிப்பார்த்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பதை விட அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது இருக்க தேவையான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
எனவே நாம் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டாது மிகவும் அன்போடும் பண்போடும் நடந்து கொள்வதால் எமது பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காண முடியும் அவ்வாறு நாம் செயற்படும் போது வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையும் தவிர்த்து கொள்ளலாம்.
எனினும் தற்போது சர்வதேச நாடுகள் மனித உரிமை என்ற விடயத்தை வைத்து இலங்கை மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
எனினும் இந்த நாட்டில் உள்ள தமிழ், சிங்களம் முஸ்லீம்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய பிரச்சினைகளுக்கு எமக்கிடயே தீர்வை காண வேண்டும் .
அவ்வாறு நாங்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வரும் போது எங்களுக்கு வெளியில் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் யுத்தத்தினால் முழுநாடும் அமைதியற்ற சூழலாக இருந்தது. அப்போது வடக்கு கிழக்கு என்று இல்லாது தெற்கு உட்பட நாடாளாவிய ரீதியிலும் உள்ள மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது அந்த நிலை முழுமையாகமாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த சூழலை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இருப்பினும் கடந்த காலங்களில் யுத்தத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர் யுவதிகளை புனர்வாழ்வு அளித்து அவர்களை மீண்டும் நல்ல பிரஜைகளாக சமூகத்துடன் ஜனாதிபதி இணைத்துள்ளார்.
அதற்காக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை உருவாக்கி பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல்வேறு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் எங்களால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை என்பது நீங்கள் இழந்திருக்கும் இழப்புக்கு மாற்றீடாக அமைய முடியாது. அத்துடன் இது நியாயப்படுத்தும் விடயமும் அல்ல. எனினும் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதே எதிர்பார்ப்பு ஆகும்.
இருப்பினும் இன்று நாடு பாரிய அபிவிருத்தி அடைந்து வருகின்றது. மேலும் மக்களிடத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த நாம் தொடர்ந்தும் உதவிகளை மேற்கொள்வோம் என்றார்.
















