மதிமுகவும் நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும்: – பழ. நெடுமாறன்

தமிழர் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.

தமிழ்த்தேசியத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள் நாங்கள் என வெளிப்படையாக தெரிவித்து செயல்படுகிற மதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் நிகழ்ந்துவருகின்றன. சமூக வலைத்தளங்கள் தொடங்கி தொண்டர்களுக்கிடையேயான வெளிப்படையான மோதல் வரை மேற்கண்ட இரு கட்சிகளுக்கிடையேயான முரண்கள் நீடித்து வருகின்றன.

வைகோ தமிழரே அல்ல நாம் தமிழர் கட்சியினரும், சீமான் உலக தமிழர்கள் மத்தியில் பொய்யான தகவல்களை தெரிவித்து பணம் பெற்று ஏமாற்றுவதாக மதிமுகவினரும் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிவரக்கூடிய சூழலில், தமிழர் வாழ்வாதார சிக்கல்களுக்காக இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியல் கட்சிகளுக்குள் போட்டியும் கருத்து மோதல்களும் இருப்பது, ஜனநாயக முறையில் தவிர்க்க முடியாதது. ஆனால், ஈழத் தமிழர், காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பொதுப்பிரச்னைகளில், கட்சி எல்லைக்கோடுகளுக்கு அப்பால், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தமிழர்களும் ஒன்றுசேர்ந்து நின்றால்தான் நாம் வெற்றிபெற முடியும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். இதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!