யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடாத்த தவறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இந்த இழப்புக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அமெரிக்காவின் சிவிலியன் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்காக விசேட பிரதிநிதி சாரா செவால் (Sarah Sewall) தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்துமாறு இரண்டு தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவை அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவர்கள் மீது நடத்தப்பட்ட வரும் தாக்குதல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இ;வ்வாறான விசாரணைகளை நடத்தாது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்திற்கு பிரித்தானியா, மொன்டஜெனரோ, மெசிடோனியா, மொரிஷியஸ் மற்றும் யுகஸ்லாவியா போன்ற நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
















