பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியை தற்போது வகித்துக்கொண்டுள்ள இலங்கை, பொதுநலவாயத்தின் முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் அது தோல்வியடைந்துள்ளதாகக் கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹார்பர் குற்றம்சுமத்தியுள்ளார். லண்டனிலுள்ள பொதுநலவாயச் செயலகத்தில் பொதுநலவாய நாள் நேற்றுக் கொண்டாடப்பட்டது.இதற்காக அவர் விடுத் துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் கடுமையாக விமர்சித்த கனேடியப் பிரதமர், இலங்கை பொதுநலவாயக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று தெரிவித்து, கடந்த நவம்பரில் இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்திருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியிட்டுள்ள பொதுநலவாயச் செய்தியில், பொதுநலவாயத்தின் கொள்கைளைப் பொதுநலவாயத்தின் உறுப்புநாடுகள் அனைத்தும் உறுதியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். குறிப்பாக மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், மதச் சுதந்திரத்தைப் பாதுகாத்தலும் ஊக்குவித்தலையும், எந்த அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்த்தலையும் பொதுநலவாய உறுப்பு நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும். நான் இலங்கை தொடர்பான எனது கவலைகளை வலியுறுத்த விரும்புகின்றேன். அதுவும் பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியை வகிக்கின்ற இலங்கை, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி இரு விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளன. இவை இரண்டும் இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















